உள் துறை அமைச்சர் அமித் ஷாவைத் தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளைத் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அவசரப் பயணமாக நேற்று (மார்ச் 2) டெல்லி சென்றனர். அப்போது, உள் துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சிஏஏ விவகாரங்கள் குறித்தும், தமிழகத்தில் போராட்டங்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றம் வரும் 9ஆம் தேதி கூடவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்காக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை பற்றி முதல்வரிடம் பேசினேன். தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன்” என்று தெரிவித்தார்.
**-எழில்**
�,