தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உணவகங்கள், கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பண்டிகை காலங்கள் வருவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன.
மேலும்,
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பொருள்கள் வாங்குவதற்காகக் கூட்டம் கூடுவார்கள் என்பதால் இதைத் தவிர்க்க **அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள், அடுமனைகள் ஆகியன இயங்க விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் தளர்த்தப்படுகின்றன.**
அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதிக்கான உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.
**நவம்பர் 1 முதல் தளர்வுகள்**
கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் புதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கேரளாவை தவிரப் பிற மாநிலம் மற்றும் தமிழகத்துக்குள் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் நூறு சதவீத இருக்கைகளில் மக்கள் பயணிக்கலாம்.
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி போன்ற அரசு பயிற்சி நிலையங்களும் நூறு சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் நடத்திக் கொள்ளலாம். அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது அவசியம்.
**தடை**
திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,