ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் தடை?

politics

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும் ஊரடங்கு தொடர்பாக நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “நிபா வைரஸ் எதிரொலியாகக் கேரள மாநிலத்துக்குப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தற்போது உள்ள தடை நீட்டிக்கப்படுகிறது.

நம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியுள்ள நபர்களில் சுமார் 12 சதவிகிதம் நபர்களுக்கு இரண்டு தவணை (Two Doses) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 45 சதவிகித நபர்களுக்கு ஒரு தவணை (Single Dose) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை ஏற்படலாம் என்று அரசு எச்சரித்துள்ள நிலையில், தினந்தோறும் சுமார் மூன்று லட்சம் தடுப்பூசிகள் என்ற அளவிலிருந்ததை, தற்போது சுமார் ஐந்து லட்சம் என்று அதிகரித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் பண்டிகைகளைத் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறும் பொதுப் போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்துமாறும் கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டும் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அனுமதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் (5 நபர்களுக்கு மிகாமல்) பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் (5 நபர்களுக்கு மிகாமல்) சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதியைப் பெற்று. அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.