சவாலான காலகட்டத்தில் புதிய உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி

Published On:

| By Balaji

தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஓய்வு பெறும் நிலையில், மிக முக்கியமான இந்தப் பதவிக்கு மூத்த போலீஸ் அதிகாரியான ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியமான உளவு அமைப்பான RAW (RESEARCH AND ANALYSIS WING) அமைப்பில் பணியாற்ற ஈஸ்வரமூர்த்தி மத்திய அரசால் அழைக்கப்படுகிறார் என்று தகவல்கள் கசிந்த நிலையில், தமிழக உளவுத்துறையின் தலைவராகியிருக்கிறார் ஈஸ்வரமூர்த்தி.

அரசைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லக்கூடிய பொறுப்பு ஆளுங்கட்சியினருக்கு எப்படி அதிகமாக உள்ளதோ, அதே அளவு பொறுப்பு உளவுத்துறையை நிர்வகிக்கும் அதிகாரிகளின் கையிலும் உள்ளது. எதிர்க்கட்சியினர், ஆட்சிக்கு எதிராகச் செயல்படுவதையும்,செயல்படப் போவதையும், அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்களிடம் எந்த அளவு எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் மோப்பம் பிடித்து அரசுத் தலைமைக்குத் தெரிவித்து அலர்ட் செய்வது உளவுத்துறையே. இந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த தமிழக உளவுத்துறையின் ஐஜியான சத்தியமூர்த்தியின் பதவிக் காலம் மே மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

அடுத்த உளவுத்துறை ஐஜி யார் என்று கடந்த ஒரு மாதமாகவே யூகங்கள் நிலவின. சிசிபி அடிஷனல் கமிஷனராக பதவி வகித்த ஈஸ்வர மூர்த்தியே அடுத்த உளவுத்துறை ஐஜியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 30 ஆம் தேதி அவரே அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஈஸ்வரமூர்த்திக்கு சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக இன்டர்னல் செக்யூரிட்டி கொடுக்கப்பட்டதிலிருந்தே அவர் உளவுத்துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். இவர் ஏற்கனவே சிபிஐ, உளவுத்துறை, உள்நாட்டுப் பாதுகாப்பு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர். எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். குறிப்பாக இஸ்லாமிய விவகாரங்களில் இவரது அணுகுமுறையும், பணித் திறனும் வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது.

இவரது பணித்திறனையும், அர்ப்பணிப்பு உணர்வையும் அறிந்து சர்வதேச அரங்கில் இந்தியாவின் உளவு நிறுவனமான ரா (research and analysis wing) அமைப்பில் இவரை பணியமர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் விரும்பியதாகவும் தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தமிழக உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஈஸ்வரமூர்த்தி. தேர்தலை நெருங்கும் முக்கியமான, சவாலான காலகட்டத்தில் ஈஸ்வரமூர்த்தியின் பணியும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

**-வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share