Nவலிமை சிமெண்ட்: விலை அப்டேட்!

Published On:

| By Balaji

சமீப நாட்களாக முக்கியமான கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்தது. இதனால் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

விலை உயர்வு காரணமாக வீடு, கட்டிடங்கள் கட்டுபவர்கள் மட்டுமின்றி சித்தாள் போன்ற கூலியாட்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக அரசின்‌ டான்செம்‌ நிறுவனம்‌ வலிமை” என்ற புதிய பெயரில்‌ சிமெண்ட்‌ அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் சிமெண்ட் விற்பனை செய்யப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 16) தமிழக அரசின்‌ டான்செம்‌ நிறுவனத்தின் வலிமை சிமெண்ட்டை அறிமுகப்படுத்தி, விற்பனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது, அரியலூரில் செயல்பட்டுவரும் சிமெண்ட் நிறுவனத்தில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுபோன்று ஆண்டொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஆலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.

2021-22ஆம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது வலிமை என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வலிமை என்ற பெயரில் இன்று தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் உயர்தர சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விரைவான உலரும் தன்மையும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையும் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை சிமெண்டின் அறிமுக நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, வெளி சந்தையிலும் வலிமை சிமெண்ட் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிபிசி ரகம் மூட்டைக்கு 350 ரூபாய்க்கும் ஓபிசி ரகம் 365 ரூபாய்க்கும் விற்கப்படும். இது தவிர 30 அல்லது 35 ரூபாய் போக்குவரத்துக்காக வசூலிக்கப்படலாம். தற்போது மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும். சமூகத்தில் அனைத்து தரப்பும் வாங்கக் கூடிய வகையில் வலிமை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.

‘அரசு’ சிமெண்ட் வழக்கம் போல் விற்பனை செய்யப்படும். வலிமை என்பது புதிய பிராண்ட்” என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சிமெண்ட் தரம் மற்றும் பிராண்டின் அடிப்படையில் மூட்டை ஒன்றுக்கு ரூ.280 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஒரு மூட்டை ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ரூ.500 வரை கூட விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share