தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகவேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் சென்னையில் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் கொரோனாவைத் தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், இதுவரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழலே நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 7) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31, 667 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,634 பேர் ஆண்கள், பெண்கள் 12,016 பேர், திருநங்கையர்கள் 17 பேர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த பாதிப்பு 22,149 ஆக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 15,671 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 5,66,314 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.
இன்று மட்டும் 604 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16,999 பேர் பூரண நலம்பெற்றுள்ளனர். இன்று தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் மொத்தம் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், முதல் முறையாக அந்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
**எழில்**�,