கொரோனா வைரஸால் தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 22) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 467 பேர் தமிழகத்தில் உயிரிழந்திருக்கின்றனர். 15ஆம் தேதி நிலவரப்படி, நாளொன்றுக்கு 300 வரை ஏற்பட்ட உயிரிழப்பு, ஒரே வாரத்தில் 150க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை 19,598 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில் உயிரிழப்பு அதிகமாக உள்ள ஆறு மாநிலங்களில் தமிழகமும் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிரா,கர்நாடகம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் 7 மாநிலங்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. 6 மாநிலங்களில் 5000 முதல் 10,000 ஆக உள்ளது. 93க்கும் அதிகமான மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த மே 10ஆம் தேதி 23.83 சதவீதமாக இருந்த வைரஸ் பாதிப்பு இன்றைய நிலவரப்படி 12.45 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் 382 மாவட்டங்களில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே பாதிப்பு இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,