திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்குத் தவிரத் தமிழகத்தில் இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. மூன்றாம் அலை வேகமாகப் பரவி தற்போது ஓய்ந்துள்ளது. தினசரி பாதிப்பு 400க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தமிழக அரசு.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15-02-2022-இன்படி, ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண்.40-3/2020/DM-I(A), நாள் 25-02-2022-இல் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை (Risk Assessment Based Approach) கடைப்பிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீளத் திரும்புவதற்கு ஏதுவாக, இதுவரை நடைமுறையிலிருந்து வந்த சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மார்ச் 3-ம் தேதி முதல் நீக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**கட்டுப்பாடுகள்**
“மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.
இந்த இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன” என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
**-பிரியா**