ஆளுநருக்கு எதிராக மக்கள் இயக்கம்: கே‌.எஸ்.அழகிரி

Published On:

| By admin

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் தாமதம் செய்வதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டது.

வழக்கம்போல ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதை காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில், அவர்கள் அனுமதித்த இடத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசியபோது,
“புதுச்சேரி மாநிலத்தில் நமது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தொந்தரவு கொடுத்தார்களோ…
அதேபோல தற்போது தமிழ்நாட்டிலும் நமது கூட்டணி கட்சியின் ஆட்சிக்கு ஆளுநர் மூலம் தொந்தரவு கொடுக்க நினைக்கிறார் மோடி.

தமிழ்நாட்டில் மோடி கடந்த இரண்டு தேர்தல்களில் திருப்பி அனுப்பப்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. பாஜகவும் அதிமுக என்ற திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்து 23 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில்தான் வென்றது.
இந்தநிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சியை திக்குமுக்காட செய்வதுதான் மோடியின் திட்டம். அதனால் ஆளுநரை விட்டு ஆழம் பார்க்கிறார்.

தமிழக ஆளுநர் அவர்கள் தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆளுநருக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை காங்கிரஸ் நடத்தும். நாங்கள் கலவரக்காரர்கள் அல்ல. கருத்துருவாக்கம் செய்கிறவர்கள். நமது முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன பேசப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தேன்.
ஆளுநர் மூலம் ஆழம் பார்க்கும் வேலையை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டங்கள் தொடரும்” என்று பேசினார் கே. எஸ். அழகிரி.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share