mபதவிக்காக நீட்டை அனுமதித்தனர்: ஸ்டாலின்

politics

கலைஞர், ஜெயலலிதா இருந்தவரைத் தமிழகத்துக்குள் நீட் தேர்வு வரவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, கொளத்தூர், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “நீட் என்ற ஒரு கொடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி அதிலே படித்து வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தவரையில் நீட் தேர்வைத் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்த ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையில், அந்த நீட் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. காரணம், அவருடைய பதவி நிலைக்க வேண்டும். ஆகவே தன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை ஏற்றுக்கொண்டு நீட்டை தமிழ்நாட்டிற்குள் நுழையவிட்டார்கள்” என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ஆட்சியில் மட்டுமல்ல, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், எல்லாத் துறைகளிலும் முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத்தான் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளையுமே ஈடுபடுத்தி, “நான் முதல்வன்” என்ற திட்டத்தை நடத்தக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்த திட்டம் கொண்டு வருவதற்கு அனிதா அச்சீவர்ஸ் அகாடமியும் ஒரு காரணம்.

அப்படிப்பட்ட நிலையிலே தான் இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் இது வரை இளம் பெண்கள் 7 பிரிவுகளில் 515 பேர்களுக்கு மடிக்கணினியும், சான்றிதழ்களும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். இளைஞர்கள் 3 பிரிவுகளில் 236 பேர் மடிக்கணினியும், சான்றிதழ்களும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள்.

இன்று இளம்பெண்கள் 152 பேர்கள், இளைஞர்கள் 71 பேர்கள், 64 மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கிறார்கள். மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கக்கூடிய அத்தனை பேரையும் நான் இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வராக மட்டுமல்ல, திமுக தலைவராக மட்டுமல்ல, எல்லாத்தையும் விட உங்களில் ஒருவனாக அத்தனை பேரையும் நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

ஆகவே இன்னும் பல வெற்றிகளை நீங்கள் பெறவேண்டும் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி நான் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மானியக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, நாளை, நாளை மறுநாள் விடுமுறையாக இருந்தாலும், நாளைய தினம் நான் கேரள மாநிலத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காகச் செல்கிறேன்.

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த மானியக் கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்வதற்காக இப்போது இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லாமல் நேராகக் கோட்டைக்குத்தான் செல்கிறேன். அங்கே இருக்கக்கூடிய அதிகாரிகளிடத்தில், அமைச்சரிடத்தில் ஆய்வு நடத்தி வர இருக்கக்கூடிய மானியக் கோரிக்கைகள் எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும், திட்டமிட்டு பணியாற்றவேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் போக வேண்டும். அதனால்தான் அதிக நேரம் உங்களிடத்திலே பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், இன்றைக்கு உங்கள் மூலமாக இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *