டிரம்ப்பை விட ஜெ முக்கியம்: டெல்லி விருந்தை புறக்கணிக்கும் எடப்பாடி

Published On:

| By Balaji

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு இன்று வந்திருக்கும் நிலையில்,. நாளை (பிப்ரவரி 25) டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சார்பில், டிரம்புக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டிரம்ப் விருந்தில் கலந்து கொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் டிரம்ப்பை விட ஜெயலலிதாவே முக்கியம் என்பதால், இந்த விருந்து நிகழ்வில் கலந்துகொள்ளும் சூழல் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடிய முதல்வர் பின்னர் சேலம் செல்வதற்காக கோவைக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது, “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை பற்றி, மோடி சந்திப்பு என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட, “தலைவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி அவர்கள் பேட்டியளித்த பிறகுதான் அதுபற்றி கருத்து சொல்ல முடியும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.

டெல்லியில் டிரம்புக்கு அளிக்கும் விருந்தில் நீங்கள் பங்கேற்கிறீர்களா என்ற கேள்விக்கு, “அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருக்கின்ற காரணத்தாலே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.

டிரம்ப், மோடியை விட ஜெயலலிதாவே தனக்கு முக்கியம் என்று எடப்பாடி சொல்லாமல் சொல்லியிருப்பதாக அதிமுகவுக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த விவகாரம்.

[டிரம்ப்புக்கு விருந்து: எடப்பாடிக்கு அழைப்பு!]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/02/23/43/Trump-dinner-in-Delhi-President-call-to-cm-edappadi-palaniswamy)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share