கொரோனா சிகிச்சை மையங்களை பராமரிக்க ரூ.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 11அதிகாரிகள் குழுக்கள், துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் நேற்று(ஏப்ரல் 22) காலை 11 மணி முதல் 1 மணி வரை ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு ஒன்றை அவர் வெளியிட்டார். அதில்,” கொரோனா சிகிச்சை மையங்களை பராமரிக்க முதல்கட்டமாக ரூ.61 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் உடனடியாக கொரோனா மையங்களை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் போர்கால அடிப்படையில் ஆக்சிஜன் வசதிக் கொண்ட படுக்கை எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட சோதனை முகாம்களில் உடனடியாக பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு தரம் பிரித்து கொரோனா சிகிச்சை மையம் அல்லது கொரோனா மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட கூடுதலாக உயர்த்த வேண்டும்.
ஏற்கனவே, கண்டறியப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர்கள் உரிய வழிமுறையை பின்பிற்றி பயன்படுத்த வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய் தொற்றின் பரவலை 5 சதவீதத்துக்கும் கீழே கொண்டுவர வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
ஏப்ரல் 21ஆம் தேதிவரை மொத்தமாக 49,23,935 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் 10-12 லட்சம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம்கள் மூலம் தகுதிவாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.
ஒரே நேரத்தில் 10 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி பெறப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில்4 அல்லது 5 பேருக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் மருந்து வீணானது. தற்போது இது குறைக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் நிலையில், தடுப்பூசி முழுமையாக பயன்படுத்தப்பட்டு வீணாவது முற்றிலும் தவிர்க்கப்படும். தகுதியான அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைக்கு கடந்தாண்டு மேற்கொண்ட பணிக்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.65 கோடி, மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
.�,