இதையெல்லாம் திமுகவிடம் எதிர்பார்க்கமுடியாது: சசிகலா

politics

தமிழக அரசின் பட்ஜெட் திமுகவுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்குமே தவிர சாமானிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிவித்துள்ளார் வி.கே.சசிகலா.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பொது பட்ஜெட்டும், நேற்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் திமுகவினருக்கு மகிழ்ச்சியை அளிக்குமே தவிரச் சாமானிய மக்களுக்கு எந்த பலனும் சென்று சேர போவது இல்லை. ஏற்கனவே திமுக ஆட்சியில் இதுபோன்ற அலங்கார அறிக்கைகளைப் பார்த்து தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது இது சாமானிய மக்களின் நலனுக்கான பட்ஜெட்டாக தெரியவில்லை. இது கார்ப்பரேட்களுக்கு உதவிடும் பட்ஜெட்டாகத்தான் தெரிகிறது.

திராவிட சிந்தனை கொண்ட அரசானது ஐந்து முக்கிய அம்சங்களை எந்நாளும் கடைபிடிக்க வேண்டும் என்பது நமது ஒப்பற்ற தலைவர்களின் மூலம் நான் கற்றுக் கொண்டது.

அதாவது

அன்றாடம் ஒவ்வொரு மனிதனின் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாக இருக்க வேண்டும்.
மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தைப் பேணி காத்திட வழிவகை செய்ய வேண்டும்.

கடைக்கோடி தமிழனுக்கும் தரமான கல்வி கிடைத்திட உறுதி செய்திட வேண்டும்.

அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.

கிடைத்த வேலைவாய்ப்பு பறிபோகாத வகையில் பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டும்.

இந்த ஐந்து முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு தான் ஒரு அரசானது நிதி ஒதுக்கீடு செய்வதை வரையறுக்க வேண்டும். திமுக அரசிடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுவதாக இந்த பட்ஜெட் மூலம் தெரியவருகிறது. எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் சேமிப்புகளையும் காப்பாற்ற முடியாமல், தவிக்கும் தாய்மார்களுக்கு அவர்களுடைய பெண் பிள்ளைகளின் திருமண கனவும், இந்த திமுக அரசின் நிதிநிலை அறிக்கையால் தகர்ந்துவிட்டது.

தங்கத்தாலான தாலி அணிவது தமிழகப்பெண்களின் சுயமரியாதை மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவே இருந்துவருகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் திமுக அரசு இனிமேல் தமிழ்ப் பாரம்பரியத்தின் காவலன் என்று மார்தட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக அரசு இந்த முடிவைக் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்து இந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய், மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம், நகைக் கடன் தள்ளுபடி என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் சொல்லி எவ்வாறு மக்களை ஏமாற்றினீர்களோ, அதுபோன்று இப்பொழுது புதிய பரிமாணத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து மீண்டும் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கப் போவதாக அனைவரும் கருதுகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லிவிட்டு அதை தற்போது முற்றிலும் மறந்திருப்பது வேதனை அளிக்கிறது. டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை, மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க மறுவாழ்வு மையங்கள் அமைப்பது போன்ற எந்தவித அறிவிப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

மகளிருக்கு இலவச பேருந்து என்று அறிவித்து நடைமுறைப்படுத்தியது திமுக அரசு. இந்தத் திட்டத்தால் நாமும் எப்படியாவது பலன் அடைந்துவிட வேண்டும் என்று தினமும் பெண்கள் முயற்சி செய்து ஏமாற்றம் அடைவது தான் மிச்சம். குறிப்பாக சென்னையில் வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளியில் படிக்கும் மாணவிகள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் வெள்ளை போர்டு பேருந்து எப்போது வரும் என்று பேருந்து நிலையங்களில் காத்திருக்கின்றனர். எவ்வளவு நேரம் ஆனாலும் இலவசமாகப் பயணம் செய்கிற பேருந்துகள் கண்ணில் படாததால், பின்னர் வேறு வழியின்றி வருகின்ற சிவப்புநிற பேருந்துகளில் காசு கொடுத்து டிக்கெட் எடுத்து பயணம் செய்கின்ற நிலைமைதான் இன்றைக்கு நிலவுகிறது. இதுதான் திமுக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம்.

கடந்த மாதங்களில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை ஆன்லைன் பதிவு முறையில் செய்வதற்கு கட்டாயப்படுத்தியபோது, அதில் ஏற்பட்ட குளறுபடியால் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள டிஜிட்டல் விவசாயம் எந்த வகையில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என்பது கேள்விக்குறியானது.

தமிழகத்தில் தற்போது உள்ள நிதி பற்றாக்குறையானது கொரோனா; சார்ந்த காரணங்களாலும் மற்றும் பல்வேறு உலக நிகழ்வுகளாலும் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். இருந்தபோதும் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் ஒரு தாய் எவ்வாறு தனது வாயையும், வயிற்றையும் கட்டி தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவாரோ அது போன்று, ஒரு அரசு தன் சொந்த தேவைகளை குறைத்துக் கொண்டு மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் செயல்படவேண்டும்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தமிழக மக்கள் இந்த ஆட்சியாளர்களை நிராகரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0