தமிழர் நலன்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்ற முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார். அதன்பிறகு சுமார் 7 மாதங்கள் வரை தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகனை, தமிழக பாஜக தலைவராக நியமித்து தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார்.
பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று (மார்ச் 13) தமிழகம் வருகை தந்தார் முருகன். சென்னை விமான நிலையத்தில் அவரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து அளித்து வரவேற்றனர். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு முருகனுக்கு பூங்கொத்து அளித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழிசை சவுந்தரராஜன் தலைவராக இருந்தபோது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அவருக்கு ஆதரவாளர்கள் அதிகம். முருகனை வரவேற்க அவர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு முருகன் வருகை தந்தார். அவரை முன்னணி தலைவர்கள் வரவேற்று, மாநிலத் தலைவர் இருக்கையில் அமரவைத்தனர்.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன் சகிதம் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலோடு கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை துவங்கியுள்ளோம். பாஜகவில் சாதாரண தொண்டனாக இருந்தாலும் பெரிய பொறுப்புக்கு வரமுடியும். மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம். தமிழக நலன், தமிழர்களின் நலனை விட்டுக்கொடுக்க மாட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வெற்றிபெற்றுள்ளோம். வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இடம்பெறுவர். இதுதான் மாநிலத் தலைவராக என்னுடைய இலக்கு” என்று தெரிவித்தார்.
ரஜினி குறித்த கேள்விக்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று தெரிவித்தார் புதிய பாஜக தலைவர் முருகன்.
**எழில்**�,