சட்டமன்றத்தை முற்றுகையிடும் இஸ்லாமிய அமைப்புகள்!

Published On:

| By Balaji

சிஏஏவை எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மஜத பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அழைப்பு விடுத்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மாநிலங்களவையில் இதனை ஆதரித்து வாக்களித்த அதிமுக, குடியுரிமை திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகிறது. இதனிடையே சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட வேண்டும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது சபாநாயகரிடம் திமுக மனு அளித்தது. ஆனால், அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது மீண்டும், திமுக, காங்கிரஸ், மஜக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளன.

இதுதொடர்பாக தமிமுன் அன்சாரி இன்று (பிப்ரவரி 16) வெளியிட்ட அறிக்கையில், “சிஏஏவுக்கு எதிராக பல மாநில அரசுகள் சட்டமன்றங்களை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில், நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.அத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்களும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி எதிர்வரும் பிப்ரவரி-19 அன்று தமிழக சட்டமன்றத்தை அமைதி வழியில் முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ள தமிமுன் அன்சாரி, அதுபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அன்றைய தினம் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்ட நிகழ்வுகளில் அனைத்து சமூக மக்களும் அலை, அலையாய் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share