தமிழக சட்டமன்றத்தின் மானியக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்குகிறது.
சட்டமன்றத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அதன்பிறகு நான்கு நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்காக மார்ச் 9ஆம் தேதி சட்டமன்றக் கூட்டம் தொடங்கும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிஏஏ, என்ஆர்சி, என்.பிஆருக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் இன்று (மார்ச் 9) காலை சட்டமன்றக் கூட்டம் கூடுகிறது. மறைந்த திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நிதியமைச்சருமான க.அன்பழகனுக்கு இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திருவொற்றியூர் தொகுதி கே.பி.பி.சாமி, குடியாத்தம் காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இன்றைய கூட்டம் அத்துடன் முடிவடைகிறது. அதன் பின்னர் நாளை மறுநாள் முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ளன.
சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
**துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் தேதி**
மார்ச் 11: வனம், சுற்றுச்சூழல்.
மார்ச் 12: பள்ளிக் கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயா்கல்வித் துறை.
மார்ச் 13: எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை.
மார்ச் 16: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை.
மார்ச் 17: மீன் வளம், பணியாளா் மற்றும் நிர்வாகச் சீா்திருத்தத் துறை, கால்நடை பராமரிப்பு.
மார்ச் 18: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, கட்டடங்கள் மற்றும் பாசனங்கள் (பொதுப்பணித் துறை).
மார்ச் 19: கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை.
மார்ச் 20: நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத் துறை.
மார்ச் 21: (சனிக்கிழமை): சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை.
மார்ச் 23: வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல், அதன்மீது வாக்கெடுப்பு.
மார்ச் 24: தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை.
மார்ச் 26: கைத்தறி மற்றும் துணிநூல், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை.
மார்ச் 27: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.
மார்ச் 30: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பதிலுரை (முதல்வா் பழனிசாமி).
மார்ச் 31: வேளாண் துறை.
ஏப்ரல் 1: தகவல் தொழில்நுட்பவியல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயா்தணிப்பு.
ஏப்ரல் 2: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை.
ஏப்ரல் 3: சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை.
ஏப்ரல் 4: தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.
ஏப்ரல் 7: இயக்கூா்திகள் குறித்த சட்டங்கள் – நிர்வாகம், போக்குவரத்துத் துறை.
ஏப்ரல் 8: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
ஏப்ரல் 9: பொதுத்துறை, மாநிலச் சட்டப் பேரவை, ஆளுநா் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள்.
இறுதியாக அரசின் சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.�,