முதல் சட்டமன்றம் – ஆளுநர் உரை: தயாராகும் எதிர்க்கட்சிகள்!

Published On:

| By Balaji

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மூலம் அமைக்கப்பெற்ற புதிய சட்டமன்றத்தின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜூன் 21) சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.

முதலமைச்சர் இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்க இந்தக் கூட்டத் தொடரை தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 10 மணிக்குத் தனது உரையோடு தொடங்கி வைக்கிறார்.

கொரோனா காலம் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அவையில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. சமூக இடைவெளி அடிப்படையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என்று அறிவித்த திமுக, தற்போது நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்திருக்கிறது.

இதுகுறித்து கடந்த ஜூன் 16ஆம் தேதி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீசெல்வம் வெளியிட்ட அறிக்கையில், “கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல நீட் பாதிப்பை கண்டறிய குழு எதற்கு? எனவே, முதல் சட்டமன்றத் தொடரிலேயே நீட் எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதே கருத்தை தினகரன் உள்ளிட்டோரும் வற்புறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய ஆளுநர் உரையிலும் தமிழக சட்டமன்றத் தொடரிலும் நீட் தேர்வு முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டு கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தச் சட்டமன்றமும், அப்பாவு சபாநாயகராக அமர்ந்திருப்பதும் சுவாரஸ்யங்களையும் எதிர்பார்ப்புகளையும் கூட்டியுள்ளன.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share