தமிழகத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை: ஏப்ரல் இறுதியில் தேர்தல்?

Published On:

| By Balaji

தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது அதற்குள் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் மே 3ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று (பிப்ரவரி 17) அறிவித்தது. இதன் காரணமாக, தமிழக சட்டமன்றத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்துவது எப்போது, அதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்குக் கடந்த 10ஆம் தேதி வந்தனர். இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு பற்றி மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் இன்று (பிப்ரவரி18) மாலை 4 மணிக்கு காணொலியில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாக்கு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் முதல்கட்ட சோதனை முடிந்துள்ளதாகவும் 80 வயதானவர்களுக்கு தபால் வாக்கு முறையைச் செயல்படுத்த ஒரு தொகுதிக்கு 12 குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வந்திருந்த தலைமை தேர்தல் ஆணையரிடம் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த அதிமுக, பாஜக கட்சிகள் வலியுறுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share