தமிழ்நாட்டில் யூரியா தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (அக்டோபர் 24) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்… விளைநிலங்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் மகத்தான பணியை உரங்கள் மேற்கொள்வதன் காரணமாக தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி நடைபெற்று வரும் டெல்டா மாவட்டங்களில் உரங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. பயிர்கள் பசுமை பெறுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் நைட்ரஜன் தேவை என்பதால் யூரியாவின் தேவை மிகவும் அதிகரித்து தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதை உணர்ந்த முதலமைச்சர் மத்திய உரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போதைய நிலையில் டிஏபி, பொட்டாஷ், யூரியா போன்றவை தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும் யூரியாவின் தேவைதான் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பிற உரங்கள் தனியார் கடைகளில் தேக்கம் அடைந்துள்ளதாகவும் யூரியா வாங்க வரும் விவசாயிகளை மற்ற உரங்களையும் வாங்குமாறு தனியார் வியாபாரிகள் நிர்பந்திப்பதாகவும் தெரிகிறது. மாவட்ட வேளாண்மை அலுவலர்களிடம் இது குறித்து புகார் அளித்து இருப்பதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசிடமிருந்து கூடுதலாக உரங்களைப் பெற்று விவசாயிகளுக்கு அளிக்கும் நடவடிக்கை ஒருபுறமிருந்தாலும் விவசாயிகளுக்கு அதிக அளவு தேவைப்படும் யூரியா தங்குதடையின்றி நியாயமான விலையில் எவ்வித நிபந்தனைகளும் இன்றி கிடைக்கச் செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி விவசாய உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகள் வாழ்வில் வளம் பெறவும் எந்த நிபந்தனையும் இன்றி யூரியா கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்”என்று கேட்டுக் கொண்டுள்ளார்
**வேந்தன்**
�,”