இயற்கை வேளாண்மை, சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம்: வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று மார்ச் 19ஆம் தேதி சட்டமன்றத்தில் தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்டை சமர்ப்பித்தார்.
இந்த வேளாண்மை பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.
“இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக சென்ற வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து 2022 -23 ஆம் ஆண்டில் ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்திருக்கிறார்.
மேலும் தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் என்ற ஒரு இயக்கத்தையும் தொடங்க இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“ஐ நா சபை 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டு ஒரு மண்டலமும் தூத்துக்குடி , விருதுநகர், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டு இன்னொரு மண்டலமும் அமைக்கப்படும்.
சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் தன்னார்வ நிறுவனங்கள் நுகர்வோர் பங்கேற்கும் சிறுதானிய திருவிழா மாநில மாவட்ட அளவில் நடத்தப்படும்” என்றும் அறிவித்துள்ளார் வேளாண் அமைச்சர்.
**வேந்தன்**