கொரோனா நெருக்கடியிலும் சுங்கக் கட்டணம் உயர்வா?

Published On:

| By Balaji

சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 563 சுங்கச்சாவடிகளில் சுமார் 10 விழுக்காடு, அதாவது 48 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி ஒரு பாதி சுங்கச் சாவடிகளிலும், செப்டம்பர் 1ஆம் தேதி மற்றொரு பாதி சுங்கச் சாவடிகளிலும் வசூல் செய்யப்படும்.

அதன்படி, தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்கக் கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயரும். அது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வில் வ்ந்து நிற்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துத் தரப்பினரும் வருவாய் இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுபற்றி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தொற்று காலம்…வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்கள். இச்சூழலில் கூட சுங்கக் கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனமில்லாதவர்கள் விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம். என்றுதான் மக்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ ஆட்சியாளர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

**கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள்**

புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை),ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுபட்டி (சேலம்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜயமங்கலம் (குமாரபாளையம்), திருமாந்துறை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி).

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share