Xஊரடங்கை மீறிய 5.95 லட்சம் பேர் கைது!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதற்காக கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் கெடுபிடிகள் குறைக்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பொது இடங்களுக்கு சகஜமாக சென்று வருவதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 30,152 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக காவல் துறை இன்று (ஜுன் 7) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 10 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரத்து 234 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 5 லட்சத்து 53 ஆயிரத்து 431 வழக்குகள் பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “5 லட்சத்து 94 ஆயிரத்து 681 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய காரணத்திற்காக 4 லட்சத்து 53 ஆயிரத்து 050 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கைது எண்ணிக்கையும், அபராதத் தொகையும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share