ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: தமிழிசை

Published On:

| By Balaji

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் நேற்று மாலை 6.56 மணியளவில்  காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு அரசியல் கட்சியினர் முதல் வசந்த் அண்ட் கோ ஊழியர்கள் வரை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு தெலங்கானா ஆளுநரும், வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனின் மகளுமான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த உருக்கமான இரங்கல் செய்தியில்,

சித்தப்பா !

நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது…

என் சிறு வயது முதல் அவருக்குத் திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்…

அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால், வேறு வேறு பாதையில் பயணித்தோம்…

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர ரத்த பாசம் இருவரிடமும் உண்டு,

தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது…

வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிப் பல பேருக்குப் பணி கொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது…

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் …

கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது…

ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்…

என்று  தெரிவித்துள்ளார்.

**-கவி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share