மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான பாடப் புத்தகங்கள் தமிழில் அச்சிடும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி நேற்று (ஜூலை 20) தெரிவித்தார்.
திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கை திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.லியோனி, “தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். திருவள்ளூர் கிடங்கிலிருந்து 860 பள்ளிகளுக்குப் புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 400 பள்ளிகளுக்குப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது பாடநூல் கழகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்னொரு பணியைக் கொடுத்திருக்கிறார். பொறியியல் மற்றும் மருத்துவத்தைத் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகங்களைத் தமிழில் அச்சிட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
இதை மிகப் பெரிய பொறுப்பாக எடுத்துக்கொண்டு, கிராமப்புற மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் தாய்மொழியில் கல்லூரிக் கல்வியைப் படிக்கப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும். இதன்மூலம், ‘தாய் மொழியில் உயர்கல்வி கற்றல்’ என்ற பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரது கனவை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
என்னுடைய பதவி என்பது நியமிக்கப்பட்ட பதவி என்பதால், என்னுடைய கலைப் பயணமும் தொடர்ந்து இருக்கும்” என்று கூறினார்.
**-பிரியா**
�,