நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மதுபான கடைகளும் நாளை மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மது பிரியர்கள் இன்றே டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்து வருவதைக் காணமுடிகிறது.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஏறத்தாழ நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்ததால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் முதல் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன.
இந்த சூழலில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு இன்று காய்கறி இறைச்சிக் கடைகளில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
அதுபோன்று மதுபான கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மதுபானக் கடைகளும், மதுபான கடைகளுடன் இயங்கும் மதுபான கூடங்களும் மூடப்பட்டிருக்கும். இதனை அந்தந்த மாவட்ட டாஸ்மாக் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது
இதனால் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள மதுபிரியர்கள் இன்றே டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,