தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த இரு தினங்களாகச் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று தி நகர், மயிலாப்பூர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
தி நகரில் பேசிய அவர், “ திமுக ஆட்சிக் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்காலத்தை வீணடித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து என்ன செய்வார்கள்” என எதிர்க்கட்சியை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, “2021 தேர்தலோடு அதிமுக காணாமல் போய்விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தைச் செய்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் என்னைப் பற்றித்தான் பேசி வருகிறார்.
நான் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று அவர் கூறுகிறார். இவர் சொல்லித்தான் நான் வாழவேண்டுமா, இறைவன் அருளால் தான் வாழ்கிறேன். கோயிலுக்குச் சென்றால் திருநீறை அழிப்பவர்கள் அல்ல நாங்கள். உண்மையான தெய்வ பக்தி கொண்டவர்கள்” என்று பேசினார்.
”அதிமுக ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். தி.நகருக்கு வந்து பாருங்கள், சிங்கப்பூர் போல அருமையாக மாறியிருக்கிறது அதிமுக ஆட்சியில். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி நகர், பாண்டி பஜார் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி. நகர் பேருந்து நிலையம் வரை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆகாய நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ரங்கராஜபுரம் ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. கோடம்பாக்கம் பாலம் பழுது பார்க்கப்பட்டுச் சீரமைக்கப்பட்டது.
27 சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 6 கோடி ரூபாய் செலவில் 34 சிமெண்ட் கான்கிரீட் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் நவீன உடற்பயிற்சி கூடம் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
19 கோடி ரூபாய் செலவில் 9 மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்காக 200 அம்மா கிளினிக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு 192 கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் தி நகர் தொகுதியில் 6 கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
சென்னை மாநகர மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அடையாறு கூவம் ஆறுகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் வடிகால் வசதி செய்து எங்கும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 954 கிலோ மீட்டர் நீள சாலைகளுக்கு கால்வாய் அமைத்துத் தொடர் மழை மற்றும் புயல் வந்தாலும் எந்த வீதியிலும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றக் கூடிய சூழ்நிலையை அதிமுக அரசு உருவாக்கித் தந்துள்ளது. இருந்தாலும் அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.
அவர் மாநகராட்சியின் மேயராக இருந்தபோது மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்தார். பத்தாண்டு காலம் பதவியிலிருந்தும் சென்னை மாநகர மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. தனது குடும்பத்தை தான் பார்த்துக் கொண்டார்.
மழை மற்றும் புயல் களத்தில் சென்னை மாநகர மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு பூமிக்கு அடியில் மின் பாதை அமைத்து கேபிள் மூலம் மின்சாரம் வழங்கி வருகிறது. புதிய தொழிற்சாலைகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் 3 லட்சத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் தொடங்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இது நிறைவேறும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்தம் 10.5 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் முதல் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநகரமாகச் சென்னை உள்ளது என மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
ஆனால் திமுக வந்துவிட்டால் அவ்வளவுதான் தப்பித் தவறியும் எதுவும் கிடைக்காது. பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது. கட்ட பஞ்சாயத்து நடக்கும் கூலிப்படை வந்துவிடும். உங்களது சொத்து உங்களிடம் இருக்காது.
திமுகவினர் மக்களிடமிருந்து அபகரித்த நிலத்தை மீட்பதற்காக ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு பிரிவினை கொண்டுவந்து 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தந்தார்.
சென்னை முழுவதும் என்று இரண்டரை லட்சம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தது அதிமுக அரசு.
சென்னை மாநகராட்சிக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் அனைத்திலும் தற்போது நீர் நிரம்பி உள்ளது. எங்களது ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு இயற்கையே சாட்சி. ஆகவே இறைவன் இயற்கை மற்றும் மக்கள் என அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று கூறி அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார் முதல்வர் பழனிசாமி
**-பிரியா**
�,