மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?: நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Balaji

பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2018ல் தமிழக ஆளுநர் பெண் பத்திரிகை நிருபரின் கன்னத்தைத் தட்டிய விவகாரம் தொடர்பாக ஒருவர் பதிவிட்டிருந்த, முகநூல் பதிவை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் பகிர்ந்திருந்தார்.

எஸ்.வி சேகரின் இந்த பகிர்வுக்குப் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது தான் வேறு ஒருவரின் கருத்தைப் படிக்காமல் தவறுதலாகப் பகிர்ந்ததாகவும் இதனால் மனவருத்தம் அடைந்துள்ள அனைத்து பெண் பத்திரிகையாளர்களிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் கடிதம் ஒன்றை வெளியிட்டார் எஸ்‌.வி சேகர்.

எனினும், பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலான பதிவை பகிர்ந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ். வி சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நிஷா பானு முன்பு இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில், அந்த பதிவை மனுதாரர் படிக்காமல் பிறருக்குப் பகிர்ந்துவிட்டார் என்றும் இதற்காக மன்னிப்பு கோரியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி நிஷா பானு, படிக்காமல் ஏன் பகிர வேண்டும்?. அவ்வாறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. ஆனால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுத்த நீதிபதி விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share