இன்று மின்னம்பலம் காலை 7 மணி பதிப்பில் தமிழர்களே! தமிழர்களே! ‘தமிழ் வருஷப் பிறப்பு’ தமிழர்களே! என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ள எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள்.
இந்த நிலையில் “என் உடல்நிலை மிக அபாயகரமான கட்டத்தை எட்டிக் கடந்த ஒரு மாத காலமாக இன்றோ நாளையோ என்ற நிலையில் உள்ள எனது 82ஆம் பிறந்த நாள் 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று என் இனிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும் எனக் கருதி நாளை பிற்பகல் உணவுக்கு வருமாறும் எவ்விதப் பரிசுப் பொருள்களையும் கொண்டு வர வேண்டாம் என்றும் அன்புடன் வேண்டுகிறேன்” – இப்படி ஒரு செய்தி எஸ்.வி,ராஜதுரையிடமிருந்து வந்ததும் பதறிப் போயிருக்கிறார்கள் அவரின் தோழர்கள்.
தமிழ் அறிவுச்சூழலில் எஸ்.வி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. இந்து இந்தி இந்தியா, பதி பசு பாகிஸ்தான், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மொழிபெயர்ப்பு, கிராம்ஷி புரட்சியின் இலக்கணம், பிராங்க்பர்ட் மார்க்சியம், பெரியார் ஆகஸ்ட் 15, பெரியார் சுயமரியாதை சமதர்மம், கார்ல் மார்க்ஸ் 200, மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும், இந்திய அரசும் மரண தண்டனையும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் மொழிபெயர்ப்பு நூல் என்று அவர் எழுதிய, மொழிபெயர்த்த நூல்கள் தமிழ் இளைஞர்களிடம் கருத்தியல் தெளிவை விதைத்தவை.
மார்க்சிய லெனினிய இயக்கத்தில் செயற்பட்டு, பின் மார்க்சியத்துடன் அம்பேத்கரையும் பெரியாரையும் உள்வாங்கிச் செயற்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர், தொடர்ச்சியாக அந்தத் திசை நோக்கியே எழுதிவருகிறார். எழுத்தைத் தாண்டி பியூசிஎல் (மக்கள் சிவில் உரிமைக் கழகம் – People’s Union for Civil Liberties – PUCL) அமைப்பில் இணைந்து மனித உரிமைப்பணிகளை மேற்கொண்டவர். மனித உரிமைகளுக்கான கருத்தரங்குகளிலும் அரசியல் கூட்டங்களிலும் தொடர்ந்து உரையாற்றியவர்.
வெறுமனே அரசியல் கோட்பாட்டு நூல்களுடன் மட்டும் அவர் நிற்கவில்லை. சார்த்தர்: விடுதலையின் பாதைகள், கல் தெப்பம், சாட்சி சொல்ல ஒரு மரம், ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம், பார்வையிழத்தலும் பார்த்தலும், அக்மதோவா அக்கரைப்பூக்கள், சொல்லில் நனையும் காலம், ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள் என்று உலகளவிலான இலக்கியங்கள் குறித்தும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்; மொழிபெயர்த்துள்ளார்.
உடல்நலம் நலிவுற்று, கண்பார்வை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில்தான் ‘ஸரமாகோ; நாவல்களின் பயணம்’ என்ற அவரது நூல் சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது.
மார்ச் 31ஆம் தேதி ரஷ்ய – உக்ரைன் போர் குறித்து மின்னம்பலத்தில் [சிறப்புக் கட்டுரை: உக்ரைன் – ரஷ்யப் போர், இந்தியப் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?]( https://edit.minnambalam.com/k/2022/03/31/6) எழுதியவர், “நாம் எப்போதும் போருக்கு எதிராகத்தானே இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். லெனின் நிலைப்பாடுகளையும் இப்போதைய புடின் ரஷ்ய அரசின் சீரழிவுகளையும் குறித்தும் தன் தோழர்களுடன் விளக்கி இருக்கிறார். அதுவும் [இன்று (ஏப்ரல் 10) வெளியாகியுள்ள ‘தமிழர்களே! தமிழர்களே! ‘தமிழ் வருஷப் பிறப்பு’ தமிழர்களே!’](https://minnambalam.com/politics/2022/04/10/14/tamil-new-year-nomenclature) கட்டுரையை படுக்கையில் படுத்தப்படியே அவர் சொல்ல சொல்ல இன்னொருவர் டைப் செய்தது.
அதேபோல் மார்ச் 31ஆம் தேதி உக்ரைன் போர் குறித்து மின்னம்பலத்தில் எழுதிய கட்டுரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எழுதியது.
ஓர் அயல்நாட்டு இளம் மார்க்சிய அறிஞர் ஒருவர் தன் கட்டுரையை மொழிபெயர்க்க எஸ்விஆரிடம் அனுப்பியதையும் அந்தப் பணிகள் இன்னும் நிறைவுறாமல் இருக்கும் ஏக்கத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தோழர், இந்தச் சூழலில் உங்களின் தேவை முன்பைவிட அதிகம். அறியாமையையும் அதிகாரத்தையும் உடைக்கும் வல்லமை உங்கள் எழுத்துகளுக்கு உண்டு. உங்கள் பங்களிப்புகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கொஞ்சமும் மனம் தளராதீர்கள்” என்று தோழர்கள் ஆறுதல் சொல்லியுள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி திருவண்ணாமலை முதல் சென்னை வரை பல ஊர்களில் இருந்தும் நண்பர்கள் பிறந்த நாளன்று தங்களைச் சந்திக்க குன்னூருக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று அவரிடம் தோழர்கள் சொன்னபோது அவர் குரலில் உற்சாகம் மேலெழுந்துள்ளது. அந்த உற்சாகம் இன்னும் ஒளியுடன் தொடர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
இன்று 82 வயது முடிந்து 83ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தோழர் எஸ்விஆர். மின்னம்பலத்தின் பிறந்தநாள் வாழ்த்துகள்!