நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 6) தள்ளுபடி செய்தது.
இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதற்காக ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்நிலையில் மாணவர்கள் சிலர் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் நீட் தேர்வு நடைபெறும் நாள் அன்று மேலும் பல தேர்வுகள் நடைபெறவுள்ளதால் இதனை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த மனு, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் மற்றும் நீதிபதி சி.டி.ரவிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீட் தேர்வை இந்தியா முழுவதும் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இத்தகைய ஒரு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சில மாணவர்கள்தான் கேட்கின்றனர். இவர்களுக்காக நாடு முழுவதும் தேர்வை ஒத்திவைக்க முடியாது.
திட்டமிட்டபடி செப்டம்பர் 12ஆம் தேதி தேர்வு நடைபெறும். நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரும் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டனர்.
**-பிரியா**
�,