வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம் 2020, விவசாய விளைபொருட்கள் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இச்சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், தமிழகம், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயத் துறையை முழுமையாக கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எனவே, இந்தச் சட்டங்கள் செல்லாது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதுபோலவே ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஷாவும், காங்கிரஸ் சார்பில் டி.என்.பிரதாபன் ஆகியோரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இம்மனுவிற்கு நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விவசாயிகள் நலனைக் காக்கும் வகையில்தான் இந்த சட்டங்கள் அமைந்துள்ளன என மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற வார்த்தையே மத்திய அரசின் சட்டத்தில் இடம்பெறவில்லை என மனுதாரர்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படலாம்.
**எழில்**�,