ஹெச்.ராஜா மீது சுபவீ போலீசில் புகார்! விரைவில் ஆக்‌ஷன்?

Published On:

| By Balaji

பாஜக பிரமுகர் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவரான பேராசிரியர் சுபவீரபாண்டியன் சென்னை மாநகர போலீஸிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

செப்டம்பர் 29 ஆம் தேதி தனது இயக்க நிர்வாகிகளோடு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்ற சுபவீ புகார் கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து சொல்வதற்காக வந்த பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இருந்தார்கள். அதில் ஹெச்.ராஜா அவர்கள் எந்தவிதமான தொடர்புமில்லாமல் என்னைப் பற்றி சில கருத்துகளை வெளியிட்டார். ஆரிய திராவிட போராட்டம் என்பது குப்பைத் தொட்டியில் இருக்க வேண்டியது. சுப வீரபாண்டியன் மூளையே குப்பைத் தொட்டியாக இருப்பதால், அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சுப வீரபாண்டியன் அறிவாலயத்தின் வெளியே அமர்ந்திருக்கும் பிச்சைக்காரன் என்று மதிப்போ மரியாதையோ இல்லாமல் ஒருமையில் பேசியதைக் கண்டித்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுப்பதற்காக வந்தோம். காவல் ஆணையாளர் இல்லாததால், கூடுதல் ஆணையாளர் கண்ணனிடம் கொடுத்திருக்கிறோம். ஹெச்.ராஜா பேசிய காணொளியையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம். அதைப் பார்த்துவிட்டு, ‘இப்படியா பேசியிருக்கிறார்’என்று கேட்டுவிட்டு வாங்கி வைத்துக்கொண்டார்கள். சட்ட குழுவினரிடத்தில் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக அரசியலில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ராஜா, என்னை மட்டுமல்ல தனக்கு எதிர்க்கருத்து கொண்ட அனைவரையும் முட்டாள் என்றும், மடையன் என்றும் ஒருமையிலும் கேவலமாகவும் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். இந்த அரசியல் அநாகரிகத்தை அரங்கை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்”என்றார் சுபவீ.

”ஏற்கனவே ராஜா மீது இது போன்ற பல புகார்கள் கொடுக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை இல்லை. இந்த புகார் மீதும் நடவடிக்கை இல்லையென்றால் நீதிமன்றம் செல்வீர்களா?”என்று ஒரு செய்தியாளர் கேட்க, “அதற்கு அவசியம் இருக்காது என்று கருதுகிறோம். இதற்கு முன் இருந்த ஆட்சியைப் போல் இல்லாமல் இந்த ஆட்சியில் எங்கள் புகாருக்கு நடவடிக்கை இருக்குமென்று நம்புகிறோம்”என்று பதிலளித்தார் சுபவீ.

முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான சுபவீரபாண்டியன் தமிழ்நாடு அரசின் பாடத்திட்ட அறிவுரைக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். தன் மீது ராஜா உள்ளிட்ட பலர் அவதூறு பரப்பியபோதும் அவர் எதிர்க்கருத்து சொல்வாரேயன்றி போலீசுக்கெல்லாம் போனவரில்லை.

இந்த நிலையில் ஆளுங்கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் ஹெச்.ராஜா மீது போலீசில் புகார் கொடுத்திருப்பதாகவும், அதனால் இந்தப் புகார் மீது விரைவில் நடவடிக்கை இருக்கும் என்றும் திமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share