uகோவை: இரவிலும் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்!

Published On:

| By Balaji

கோவையில் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரவிலும் மெழுகுவத்தி ஏந்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மிதுன் சக்கரவர்த்தி, மாணவி பொன்தாரணிக்கு அளித்த தொடர் பாலியல் வன்முறையால், மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மிதுனுக்கு உடந்தையாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது தலைமறைவாகியுள்ள மீராவை இரண்டு தனிப்படைகள் தேடி வருகின்றன.

இருப்பினும் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு இரவில் மெழுகுவத்தி ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாணவியின் உடலை வாங்கி அடக்கம் செய்ய பல அதிகாரிகள் மாணவியின் பெற்றோரை மூளை சலவை செய்தாலும், பாலியல் அத்துமீறலுக்கு துணைபோன முதல்வரை கைது செய்யாமல் எவ்வளவு நாளானாலும் உடலை வாங்க போவதில்லை. பள்ளி முதல்வரை கைது செய்த உடனே மாணவி உடலை அடக்கம் செய்துவிட்டு கலைந்து விடுகிறோம். அதுவரை போராட்டம் தொடரும் என்று பெற்றோர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். அதனால் இன்றும் போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இதுபோன்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான், மக்கள் நீதி மய்யம் கமல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தேமுதிக விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை உக்கடத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு பயம் காரணமாக மன வேதனையடைந்து, தற்கொலை செய்து, தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், காவல் துறை நேர்மையாக விசாரித்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கூடங்களில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது.

இதை சரியாகக் கடைப்பிடிக்காமல் போனால் மாணவ மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கல்விக்கூடங்கள் மட்டுமல்ல; பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகமோ அல்லது எந்த இடமாக இருந்தாலும் இது போன்று பொறுப்பற்று பெண்களை அச்சுறுத்தி, அவர்கள் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் ஆட்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரோ, உடன் இருப்பவர்களோ அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் இது போன்ற தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும்.

நம் மாணவச்செல்வங்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் பெண்ணாகப் பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு, தைரியமாக எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழ வேண்டும். அப்போதுதான் எந்த சவால்களையும் முறியடித்து எதிலும் வெற்றி வாகை சூட முடியும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது போன்று தவறு இழைக்கும் கல்வி நிறுவனங்களை, தமிழக அரசு கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share