மாணவியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்!

Published On:

| By Balaji

தஞ்சை பள்ளி மாணவியின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகம்பாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி பாஜக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதேசமயம் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, உடனடியாக மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய அவசியமில்லை என்று உத்தரவிட்டார்.

மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

நேற்று மாலை மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா மற்றும் உறவினர்கள், பாஜக நிர்வாகிகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். மாணவியின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடல் ஒப்படைக்கப்பட்டது.

மாணவியின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீஸ்வரன், பிராங்கிளின் ஆகியோர் தலைமையில் 30 போலீஸார் பாதுகாப்புடன் மாணவியின் உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் வடுகம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று மாலை 5 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாணவியின் உடல் இரவு 7.30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் வீட்டின் முன்பு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share