கடலூரில் சோகம்: பட்டாசு ஆலை விபத்தில் மூவர் பலி!

politics

கடலூரில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள முந்திரி தோப்பு நிறைந்த பகுதி எம். புதூர் ஊராட்சி ஆகும். இங்கு பெரிய காரைக்காடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனது மனைவி வனிதா பெயரில் உரிமம் பெற்று பட்டாசு உற்பத்தி ஆலை நடத்தி வந்தார்.

இந்த ஆலைக்கு இன்று (ஜூன் 23) நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா, வசந்தா, பெரிய காரைக்காடு பகுதியைச் சேர்ந்த சித்ரா , மூலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ், உள்ளிட்ட 4 பேர் வெடிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வெள்ளக்கரை பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் பட்டாசு வாங்க வந்துள்ளார்.

எந்த வகையான பட்டாசு வேண்டும் எனக் கேட்டு அதனை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் வசந்தா. இந்த சூழலில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரித்த அறை முழுவதும் தரைமட்டமாகின. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வசந்தா மட்டும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுபோன்று பட்டாசு வாங்க வந்த வைத்தியலிங்கம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதோடு திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக கடுமையான வெயில் அடிக்கும் நிலையில் பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே சமயத்தில் இந்த இழப்பீட்டு தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் காயமடைந்த இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படாதது தான் இதற்கு காரணம். விபத்துக்குள்ளாகி உள்ள பட்டாசு ஆலை உரிமம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதாகவும் அதை புதுப்பிப்பதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டும் கூட பாதுகாப்பு தணிக்கை உள்ளிட்ட நடைமுறைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிகிறது. விபத்து நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற பட்டாசு ஆலை விபத்துகள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்றும் அடிக்கடி நடைபெறும் பட்டாசு விபத்தினை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

2020ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கு உட்பட்ட குருங்குடி என்ற பகுதியில் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.