ஸ்டெர்லைட்டுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி!

Published On:

| By Balaji

நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் நான்கு மாதங்களுக்கு தயாரித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்ரல் 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே காலை 9.30 மணிவாக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், தே.மு.தி.க சார்பில் பாலாஜி, அன்புராஜ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூ. கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அங்கீகாரம் இல்லை என்பதால் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினருக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு இல்லை.

காலை கூடிய இந்தக் கூட்டத்தில் பேசிய திமுகவின் பிரதிநிதி கனிமொழி எம்பி,

“ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.

அதே நேரத்தில் – நாம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை, மறந்து விட முடியாது. அதில் 13 அப்பாவிகள் உயிரிழந்து – அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்றும் நிலைகுலைந்து நிற்கின்றன. தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் புறக்கணித்து விட முடியாது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.

அதேசமயம் தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் – ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.

நாடு முழுவதும் – ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்- ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிளாண்ட்டை மட்டும் இயக்கி – மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர – ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல”என்று பேசினார் கனிமொழி எம்பி.

மேலும் அவர், “நாட்டு மக்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி ஆக்சிஜன் கோரிக்கையை வைக்கிறார்கள். உச்சநீதிமன்றமே ஏன் மாநில அரசே அதை தயாரித்துக் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தைப் பார்த்துக் கேட்கிறது. இந்த நேரத்தில் ஒருமைப்பாட்டின் பக்கம் –மனிதாபிமானத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழகம் ஆக்சிஜன் வழங்குவதிலும் முன்னணியில் நின்றது என்ற பெருமையும் நாம் பெறக் கூடியதுதான். ஆகவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில்,

இந்த அனுமதி தற்காலிகமானது, அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது, ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட – மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும், அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும், ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட “காலவரம்பிற்கு” மட்டும் அனுமதி வழங்க வேண்டும், இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து – ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையில் இந்த அனுமதியின் பெயரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக அளிக்க வேண்டும், மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்.

நாங்கள் கூறிய இந்தக் கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அழுத்தமான கருத்துகளாக முன் வைக்க வேண்டும்” என்று பேசினார் கனிமொழி. ஸ்டெர்லைட் அமைந்துள்ள தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகவும் கனிமொழி இருப்பதால் அவரது கருத்தை முதல்வர் உற்று கவனித்தார்.

கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் எல். முருகன், “ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதித்து, கிடைக்கும் ஆக்ஸிஜனை தமிழகத்துக்கு பயன்படுத்திவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

அதிமுக சார்பிலும் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம், ஆனால் ஆக்ஸிஜன் மட்டுமே தயாரிக்க வேண்டும், எக்காரணம் முன்னிட்டும் இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட அனுமதிக்கப் படக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் திமுகவின் கருத்தை ஒட்டியே தங்கள் கருத்தை எடுத்து வைத்தனர்.

தலைவர்கள் பேசியதை அடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான். நாளுக்கு நாள் கொரோனா அதிகரிக்கிறது, ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என கூறினார். அதை ஒட்டி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி தரலாமா வேண்டாமா என்பது பற்றி விவாதிக்கத்தான் இந்தக் கூட்டம்” என்று குறிப்பிட்டார்.

தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இந்த முடிவுகளில் மாற்றம் செய்துகொள்ளலாம்”என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் ஒரு வாரத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share