பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுக்கு தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 20) தாக்கல் செய்தார். ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சட்ட முன்வடிவை தாக்கல் செய்யும் வாய்ப்பை ஜெயலலிதா எனக்கு அளித்த பாக்கியமாக கருதுகிறேன்” என்றும் தெரிவித்தார்.
மசோதாவில், “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுவதும் வேளாண் மண்டலத்தில் இடம்பெறும். கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார் கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணல்மேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டாரங்களும் இடம்பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் செயல்கள் (அ) திட்டங்கள் இதனால் பாதிக்கப்படாது. துறைமுகங்கள், இணைப்புச் சாலை, தொலைத் தொடர்பு, மின்சாரம், நீர் விநியோகம் ஆகிய திட்டங்களை இச்சட்டம் பாதிக்காது. சட்ட முன்வடிவு மூலமாக, ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்கள் தொடங்கினால் தண்டனை அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் தண்டனை வழங்கப்படும். ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்.
காவிரி வேளாண் மண்டல சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றிட முதல்வர் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர், வேளாண்மை துறை, சட்டத் துறை, நகராட்சி நிர்வாகம், தொழில், ஊரகத் தொழில், கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை ஆகிய அமைச்சர்களும் இந்தக் குழுவில் இடம்பெறுவர். தலைமைச் செயலாளர், நிதி மற்றும் வேளாண்மைத் துறை செயலாளர்களும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் இதில் இடம்பெறுவர். மேலும் அரசு முன்மொழியும் 1 எம்.பி, இரண்டு எம்.எல்.ஏ.க்கள், விவசாய பிரதிநிதிகள் 3 பேரும் இடம்பெறுவர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விவாதத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
**த.எழிலரசன்**�,