தேமுதிக பொதுச் செயலாளரும், நடிகருமான விஜயகாந்த்தின் 68 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் வறுமை ஒழிப்பு தினமாக இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 68ல் அடியெடுத்து வைக்கும் அவர் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான ‘கேப்டன்' @iVijayakant அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
68ல் அடியெடுத்து வைக்கும் அவர் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) August 25, 2020
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, திமுகவை நோக்கி நகர்ந்து வருவதாக [திமுகவை நோக்கி தேமுதிக?](https://minnambalam.com/politics/2020/08/02/35/dmdk-dmk-starts-talks-primary) என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆனால் தனித்துப் போட்டியிடுவதை நிர்வாகிகள் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டிசம்பரில் முடிவு செய்வோம் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது விஜயகாந்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தல் சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**�,”