விளாத்திகுளம் ஒன்றிய பொறுப்பாளரை நியமித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு இறுதியில் இருந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார். கடைசியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில் மட்டும் கலந்துகொண்டார். அன்பழகன் வீட்டில் ஓய்வெடுத்தாலும் கட்சி அறிவிப்புகள் அனைத்தும் அவரின் பெயரிலேயே வெளியாகிவந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில், திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. எனினும் கட்சியின் நீக்கம், பொறுப்புகள் அறிவித்தல் என அனைத்தும் அன்பழகன் பெயரிலேயே வெளியானது.
இந்த நிலையில் க.அன்பழகன் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதல்முறையாக பொதுச் செயலாளர் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அவர் இன்று (மார்ச் 4) வெளியிட்ட அறிவிப்பில், “தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய கழகப் பணிகள் செம்மையாக நடைபெற வசந்தம் ஏ.சி.ஜெயக்குமார் (ஆர்த்தி கிளினிக், மாரியம்மன் கோவில் தெரு, விளாத்திகுளம்-628907, தூத்துக்குடி மாவட்டம்) விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளராகவும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட கழக தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்தும் செயல்படுவார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
**எழில்**�,