pஎடப்பாடியை மாட்டிவிட்ட பன்னீர்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

அடுத்து திமுக ஆட்சிதான் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை திமுகவின் சார்பில் முப்பெரும் விழாவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 14) முப்பெரும் விழா நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வழியாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொழில்துறையைச் சீரழித்த அதிமுக ஆட்சி என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் உரையாற்றினார்.

தொடர்ந்து, திமுகவில் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய மூத்த நிர்வாகிகள் 484 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு உதவித்தொகை, உடல் நலிவுற்றவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடிய கருவிகள், இலவச ஆம்புலன்ஸ் என நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இறுதியாக உரையாற்றிய ஸ்டாலின், “அதிமுக என்ற கொள்ளைக்கார ஆட்சிக்குத் தலைமை தாங்குவதற்கு யார் தகுதியானவர் என்ற சண்டை சமீபத்தில் அக்கட்சியில் நடந்தது. கொள்ளையர்களின் அரசர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்து விட்டார்கள். ஏனென்றால் இன்னும் ஆறு மாதம் இருக்கிறது அதற்குள் தமிழ்நாட்டை மொட்டையடித்திட வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்” என சாடினார்.

தொடர்ந்து, இதன்பிறகு ஏதோ சாதித்துவிட்டதைப் போல, பன்னீர்செல்வத்தை வீழ்த்திவிட்டதைப் போல மகிழ்ச்சி அடைந்து பழனிசாமி ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதிமுக என்ற கட்சியே தோற்கப் போகிறது, தோற்கப் போகும் கட்சிக்கு யார் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன’ என்று பன்னீர்செல்வம், தன்னை மாட்டிவிட்டதே தெரியாமல் பழனிசாமி மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறினார்.

முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை பற்றி பேசிய ஸ்டாலின், “எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்வது எடப்பாடியின் முதல் பொய். 3 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக எடப்பாடி சொல்வது இரண்டாவது பொய். காவிரி உரிமையை மீட்டுவிட்டதாக எடப்பாடி சொல்வது மூன்றாவது பொய். வேளாண் மண்டலம் என்பது எடப்பாடியின் நான்காவது பொய்.அத்திக்கடவு கனவை தான் நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி சொல்வது ஐந்தாவது பொய்.

காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தை நிறைவேற்றிவிட்டதாகச் சொல்வது பழனிசாமியின் ஆறாவது பொய். அதிமுகவினரின் பகல்கொள்ளைக்கு வழிவகுக்கக் கூடிய குடிமராமத்து திட்டத்தை, நீர்நிலைகளைக் காக்கும் திட்டம் என்று சொல்வது எடப்பாடி பழனிசாமியின் ஏழாவது பொய். மின்மிகை மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்திவிட்டேன் என்று சொன்னது பழனிசாமியின் எட்டாவது பொய்.

மத்திய அரசாங்கம் கொண்டு வரும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததை விட அவர் விவசாயிகளுக்கு வேறு துரோகம் செய்ய வேண்டியதே இல்லை. வேளாண் சட்டத்தை ஆதரித்து பச்சை துரோகம் செய்தார் எடப்பாடி. எனவே அவர் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வது ஒன்பதாவது பொய்! ‘நான் பழிபாவங்களுக்கு அஞ்சுபவன்’ என்று சொல்வது பத்தாவது பொய். கடைந்தெடுத்த பச்சைப் பொய்” என்றும் சாடினார்.

மேலும், “ஒரே ஒரு அறிக்கையிலேயே பத்துப் பொய்கள் என்றால், அவர் நித்தமும் சொல்லும் பொய்களைக் கூட்டினால் நூற்றுக்கணக்கானதாக இருக்கும். அவற்றைப் பட்டியலிட்டால் சொல்லிக் கொண்டே போகலாம்.இந்தப் பொய்யாட்சிக்கு, பொல்லாத ஆட்சிக்கு, மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார் ஸ்டாலின்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share