மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“தமிழகத்தில் இருந்து தேர்வாக இருக்கும் ஆறு புதிய ராஜ்யசபா எம்பிக்களுக்காக மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மனுக்கள் பரிசீலனை முடிந்த அன்றே தமிழகத்தில் இருந்து தேர்வாக இருக்கும் ஆறு எம்பிக்களின் பெயர்களும் தெரிந்துவிடும்.
இந்த நிலையில்தான் திமுக தனது ராஜ்யசபா வேட்பாளர்களை (எம்.பி.க்களை) மார்ச் 1 ஆம் தேதி அறிவித்திருக்கிறது. தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ ஆகிய மூவரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்புகிறது திமுக.
திமுகவிலேயே பலபேர் ராஜ்யசபாவுக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு லேசான அதிர்ச்சியை அளித்தாலும், அதிக அதிர்ச்சியளித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். அதுவும் காங்கிரஸின் தேசியத் தலைமைக்குத்தான். இதில் காங்கிரஸ் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று விசாரித்தால் டெல்லி வட்டாரத்தில் இருந்து பல தகவல்கள் கிடைக்கின்றன.
கடந்த 2019 ஜுலை மாதம் தமிழகத்தில் இருந்து 3 ராஜ்யசபா உறுப்பினர்களை திமுக அனுப்பியது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் முடிந்திருந்தது. காங்கிரஸுக்கு அப்போதைக்கு வேறு வாய்ப்புகள் இல்லாததால், மன்மோகன் சிங்கை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைத்தார் சோனியா காந்தி. அப்போது ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது திமுக.
அப்போது ஸ்டாலினினின் ஆலோசகராக இருந்த சுனில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபாவுக்குள் விடக் கூடாது என்று பாஜக கடுமையாக முயற்சி செய்கிறது. இந்நிலையில் நாம் அவரை தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பினால் தேசிய அரசியலில் உங்கள் இமேஜ் உயரும். அதைவிட எதிர்வரும் தேர்தல்களில் காங்கிரஸ் நாம் என்ன சொன்னாலும் கேட்கும்’என்று யோசனை தெரிவித்துள்ளார். அதேநேரம் சபரீசனோ, ‘ மொத்தம் மூன்று எம்பி.க்களில் வைகோ, மன்மோகன் சிங் என்று இரு சீட்டுகளை வேற்றுக் கட்சியினருக்குக் கொடுத்துவிட்டு ஒரே ஒரு சீட்டை மட்டும் திமுகவுக்கு வைத்துக் கொள்வதா? அது நன்றாக இருக்காது’ என்று ஸ்டாலினிடம் கூறியுள்ளார். இதில் சபரீசனின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அடுத்த முறை வாய்ப்பு தருகிறோம்’என்று டி.ஆர்.பாலு மூலம் சோனியாவுக்கு தகவல் சொல்லிவிட்டார். இதன் பின் அடுத்த ஆகஸ்டு மாதமே ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸே மன்மோகன் சிங்கை ராஜ்யசபாவுக்கு அனுப்பிவைத்துவிட்டது.
இந்த நிலையில் இப்போது ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சோனியாவே டி.ஆர்.பாலுவிடம் பேசியிருக்கிறார். ‘போன தடவையே மன்மோகன் சிங்குக்கு கேட்கும்போது அடுத்த முறை தருவதாக சொன்னீர்கள். இப்போது மன்மோகன் சிங் எம்பி ஆகிவிட்டார். ஆனாலும் காங்கிரஸுக்கு தருவதாக சொன்ன அந்த ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுங்களேன்’என்று கேட்டிருக்கிறார் சோனியா. இந்த தகவலை டி.ஆர்.பாலு திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்.
‘மன்மோகன் சிங்குக்காகத்தானே நாம் கூறினோம். அவர் எம்பியாகிவிட்ட பிறகு மீண்டும் காங்கிரஸ் ராஜ்யசபா சீட் கேட்கிறதா?’ என்று கேட்ட ஸ்டாலின், ‘சட்டமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில் இப்ப மூன்று சீட்டுகளையும் திமுகவுக்குதான் கொடுக்க முடியும். நெருக்கடியா இருக்கு. அடுத்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுப்பதா சொல்லிடுங்க’என்று சொல்லிவிட்டார். இதையும் சோனியாகாந்தியிடம் தெரிவித்துவிட்ட டி.ஆர்.பாலு மீண்டும் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு, ‘அவங்களை கன்வின்ஸ் பண்ணிட்டேன்’என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் திமுக வேட்பாளர்களை அறிவித்த பிறகு சோனியா மீண்டும் கனிமொழி உள்ளிட்ட சில தனக்கு நெருக்கமான திமுக டெல்லி புள்ளிகளிடம் பேசியிருக்கிறார். ‘என் மனசை ரொம்ப காயப்படுத்துறீங்க. போன டயம் மன்மோகன் ஜிக்காக கேட்டப்ப நெக்ஸ்ட் டைம்னு சொன்னீங்க. இப்ப கேட்கும்போது இப்ப இல்லைனு சொல்றீங்க. காங்கிரசை திமுக ஒரு கூட்டணிக் கட்சியா மதிக்குதான்னு தெரியலை. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஒரு விஷயத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூட்டணி தர்மம் பத்தி அறிக்கை வெளியிட்டார். அந்த சில்லி விஷயத்துக்காக டி.ஆர்.பாலு டெல்லியில் இருந்துக்கிட்டே, காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைப் புறக்கணிச்சாரு. இப்ப இப்படி பண்றீங்க. கூட்டணி விஷயத்துல வேற எதுவும் முடிவு பண்ணப் போறீங்களா?’ என்று நேரடியாகவே சோனியா கேட்டிருக்கிறார். இதை தலைவரிடம் கொண்டு செல்கிறோம் என்று மட்டுமே சோனியாவிடம் கனிமொழி உள்ளிட்டோர் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே சோனியாவின் வருத்தத்தை ஸ்டாலினிடமும் தெரியப்படுத்திவிட்டார்கள்.
அண்மையில் கூட நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் போது மூத்த தலைவர்களிடம் பேசிய சோனியா, ‘திமுக ஒரு வேளை பிஜேபியோட போகுதானு ஒரு டவுட் வருது. காங்கிரஸை அவாய்டு பண்ணனும்னு பிஜேபி அவங்களுக்கு நெருக்கடி கொடுக்குது. அதுக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்துல திமுக இருந்துச்சின்னா தமிழ்நாட்ல நம்ம ஸ்டேண்ட் என்ன?’என்று ஆலோசித்திருக்கிறார் சோனியா” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.
�,”