ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்துவிட்டதாக எல்.முருகன் கூறியுள்ளார்.
கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி விவகாரத்தை அடிப்படையாக வைத்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தமிழகம் முழுக்க வெற்றிவேல் யாத்திரை செல்கிறார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கும் யாத்திரை, சுமார் 1 மாத காலம் நடைபெற்று டிசம்பர் 6 இல் திருச்செங்கோட்டில் நிறைவுறுகிறது. இதற்காக காப்பு கட்டும் நிகழ்வு சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், “அத்வானி, நரேந்திர மோடி நடத்திய யாத்திரைகள் மூலம் மாற்றங்கள் உருவானது போல, இந்த வெற்றிவேல் யாத்திரை மூலம் தமிழகத்திலும் மாற்றம் உண்டாகும்” என்றார்.
நாம் தெய்வமாக மதிக்கும் சகோதரிகளை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்டியே ஆக வேண்டும் எனக் கூறிய முருகன், “பெண்களை தவறாக பேசியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறச் சொன்ன ஸ்டாலின் அவர்களே, உங்களை தக்க நேரத்தில் கவனிக்க எங்கள் சகோதரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இனி நீங்கள் வெளியில் செல்ல முடியாது, நடமாட முடியாது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சகோதரிகளிடமும் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் சகோதரிகள் உங்களை விடமாட்டார்கள்” என்று விமர்சித்தார்.
மேலும், “ஸ்டாலின் கடவுளுக்கும் எதிரி, தாய்மார்களுக்கு எதிரி என்பதால் அவருடைய முதல்வர் கனவு தகர்ந்துவிட்டது. முதல்வராக அவர் கனவில்தான் வர முடியும், நிஜத்தில் ஒருபோதும் வர முடியாது” என்றும் முருகன் குறிப்பிட்டார்.
**எழில்**
�,