முதல்வராகி 100 நாட்கள்: அறிவாலயத்தில் நடந்த அமைச்சரவை (!) கூட்டம்

Published On:

| By Balaji

ஜனவரி 21ஆம் தேதி வியாழக்கிழமை தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியது.

தீர்மானங்களை வழக்கம்போல தனது கரகரத்த குரலில் டிகேஎஸ் இளங்கோவன் எம்பி வாசிக்க அவை நிறைவேற்றப்பட்டன.

.

அடுத்து தேர்தல் பிரிவு செயலாளரான கான்ஸ்டாண்டின் ரவிச்சந்திரன் ஒளித் திரையை ஆன் செய்தார்.

அதில் திமுக தலைவர் ஸ்டாலினின் புதிய பிரச்சார திட்டம் பற்றிய வரைபட விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து மனுக்களை வாங்குவது… ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நாள் என ஒதுக்கி இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்று விளக்கினார்.

ஏற்கனவே கிராமசபை என்ற வடிவத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார் ஸ்டாலின்.

ஆனால் இம்முறை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் செய்து அங்குள்ள கிராம மக்களை சந்தித்து அவர்களிடம் தமது பிரச்சனைகளை பற்றிய புகார் மனுக்களை வாங்குவது… திமுக ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது இதுதான் ஸ்டாலினுடைய அடுத்த பிரசார திட்டம்.

இதுபற்றி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மக்கள் கிராம சபை மூலம் மக்களிடையே பெரிய எழுச்சி உண்டாகியிருக்கிறது. இதை அடுத்துதான் இந்த திட்டத்தை தயாரித்து இருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று நகரம் கிராமங்களில் மக்களை சந்தித்து மனுக்கள் பெற இருக்கிறேன்..

ஒவ்வொரு மனு பெறப்படும் போதும் அதற்கு மனுதாரரின் பெயரிட்டு ரசீது கொடுக்க வேண்டும். அதன் ஒரு பகுதியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து நாம் பெறும் மனுக்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்டிகளில் இட்டு எனது கண் எதிரில் சீல் வைக்க வேண்டும்.

நாம் ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் இந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து நம்மை மக்களிடம் நிரூபிப்போம்” என்று ஸ்டாலின் பேச அனைத்து மாவட்ட செயலாளர்களும் கைதட்டி வரவேற்றார்கள்.

அப்போது திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலு…”ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து மனுக்கள் வாங்கும்போது ஒவ்வொருவருக்கும் அங்கங்கே ரசீது கொடுப்பது இயலுமா? எனவே தலைவர் வருவதற்கு முன்னால் அந்தந்த பகுதிகளின் திமுக நிர்வாகிகள் மூலம் மக்களிடம் மனுக்களைப் பெற்று அதற்குரிய ரசீதை அளிக்கலாம்” என்றார்..

அப்போது ஈரோடு மாவட்ட செயலாளர் முத்துசாமி… “மக்களிடையே நாம் பெறுகிற ஆயிரக்கணக்கான மனுக்களை துறை ரீதியாக பிரித்து வகைப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்” என்று குறிப்பிட…

அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்…”ஆட்சி அமைந்ததும் இதற்கென்று

ஒரு துறையையே உருவாக்குவோம்.”, என்று பதிலளித்தார்.

மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம்… “,என்ன சார் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று சொல்லிட்டு அமைச்சரவை கூட்டம் நடத்துகிறீர்களா?”என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள்…”, சார் வெற்றி எங்கள் கண்முன்னே தெரிகிறது சார். அதனால் தான் தலைவருக்கு அவ்வளவு நம்பிக்கை”, என்று பதிலளித்தார்.

**ராகவேந்திரா ஆரா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share