தேவையின்றி சீண்டியிருக்கிறீர்கள்: ஸ்டாலின், அழகிரி பதில்!

Published On:

| By Balaji

திமுகவை விமர்சித்த நட்டாவுக்கு ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக மாநிலச் செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் நடைபெற்றபோது, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழக வளர்ச்சிக்கும் இந்திய வளர்ச்சிக்கும் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “ஜே.பி.நட்டா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேவையின்றி சீண்டியிருப்பது கண்டனத்திற்குரியது. திமுக என்பது ஜனநாயக இயக்கம்; வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட ஜனநாயக இயக்கம். மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக எமர்ஜென்சியை எதிர்த்து நின்று ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக, மதவாதம் – மொழி ஆதிக்கத்தால் வளர்ச்சியைத் தடுக்கும் பாஜகதான் தமிழ்ப் பண்பாட்டுக்கும், தேச ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி. எமர்ஜென்சி காலத்தைப் போலவே உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் திமுக திமிறி எழும்; கேள்வி கேட்கும்; எதிர்த்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “கடந்த ஆறு ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருவதால்தான் பாஜகவுக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு உணர்ச்சி கொந்தளிப்பான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே பாஜக செல்வாக்கு இழந்த முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஜே.பி.நட்டா, ஆத்திரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியிருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களை பாதிக்கிற திட்டங்களைத் தொடர்ந்து திணித்து வருவதாக குற்றம்சாட்டிய அழகிரி, “தமிழகத்தின் வளர்ச்சிக்கு இங்கேயிருக்கின்ற எதிர்க்கட்சிகள் தடையாக இருப்பதாக ஜே.பி.நட்டா கூறுகிறார். வளர்ச்சிக்கு யார் தடையாக இருக்கிறார்கள்? சூழலியல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்பதற்கு அதைத் தமிழில் வெளியிட வேண்டும் என்கிற குறைந்தபட்ச நியாயமான அணுகுமுறைகூட பாஜக அரசிடம் இல்லை. மக்களின் கருத்தைக் கேட்காமல் கொரோனா காலத்தில் அவசர, அவசரமாக அதை சட்டமாக நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது தான் பாஜகவின் நோக்கமாகும்” என்று கூறினார்.

மத்திய பாஜக அரசில் இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றிலும் புறக்கணித்து ஒற்றைக் கலாச்சாரத்தைப் புகுத்தி அதன் மூலம் 136 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் அறிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற கே.எஸ்.அழகிரி,

“தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற கட்சியாக பாஜக இருக்கும் நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை, மத்திய, மாநில அரசுகள்தாம் செய்யமுடியும். அதில் குறைகள் இருந்தால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும். ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத அர்த்தமற்ற வாதமாகும். இத்தகைய வாதத்தை முன்வைத்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஜே.பி.நட்டா” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share