iதினமும் துரைமுருகனோடு பேசும் ஸ்டாலின்

politics

திமுக பொருளாளர் துரைமுருகன் தற்போது காட்பாடியில் உள்ள வீட்டில் தங்குவதில்லை. சென்னை கோட்டூர் புரத்திலும் அவர் இல்லை. ஏலகிரி மலையில் நிலாவூர் பகுதியில் தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய பங்களாவில்தான் இப்போது ஓய்வெடுத்து வருகிறார் துரைமுருகன். இந்த பங்களா கட்டி பல ஆண்டுகள் ஆனபோதும் ஓரிரு நாள் கூட அவரால் இங்கே இருக்க முடிந்ததில்லை. இப்போது ஊரடங்கு காரணமாக ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தால் இங்கே தங்கியிருக்கிறார்.

கடந்த ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்தார் துரைமுருகன். அன்றுதான், பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த துரைமுருகன், பொருளாளராகவே தொடர்வார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஊரடங்கு காரணமாக பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை என்ற காரணத்தை முன் வைத்து அந்த அறிவிப்பை செய்தார் ஸ்டாலின்.

ஆனால் துரைமுருகனோ, தனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கக் கூடாது என்று சிலர் திட்டமிட்டு காய் நகர்த்துவதாக தனது நண்பர்களிடம் விரக்தியை வெளிப்படுத்தினார். ஜூன் 3 ஆம் தேதி இந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு விரக்தியோடு சென்னையில் இருந்து புறப்பட்டார் துரைமுருகன். அப்போது, “எனக்கு பொதுச் செயலாளர் பதவி இல்லைனு முடிவு பண்ணிட்டாங்க. இனி பொதுத் தேர்தல் முடிஞ்சுதான் கட்சித் தேர்தல். இப்பவே என்னை மதிக்காதவங்க, அதிகாரம் வந்தபிறகு என்னை மதிப்பாங்களா என்ன?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வெதும்பியிருக்கிறார். இந்த உணர்வோடே காட்பாடி சென்று அங்கிருந்து ஏலகிரி நிலாவூர் சென்றுவிட்டார் துரைமுருகன்.

அங்கே அவரது மனைவி, உதவியாளர், சமையல்காரர் ஆகியோருடன் புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது என்று செலவிட்டு வருகிறார். துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார் என்பதை அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின்… இப்போதெல்லாம் தினமும் துரைமுருகனிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார் என்கிறார்கள் திமுக தலைமை வட்டாரத்தில்.

துரைமுருகனின் உடல் நலத்தை விசாரிக்கும் ஸ்டாலின், ‘எச்சரிக்கையா இருங்க. யாரையும் அதிகமா சந்திக்காதீங்க’ என்றெல்லாம் அக்கறையோடு பேசி வருகிறார். இதனால் மெல்ல மெல்ல தனது வருத்தத்தில் இருந்து விடுபட்டு வரும் துரைமுருகன் தன்னிடம் பேசுபவர்களிடம் ஸ்டாலினைப் புகழ்ந்து வருகிறார். முன்னெல்லாம் துரைமுருகனோடு அடிக்கடி ஸ்டாலின் பேச மாட்டார். முக்கிய விஷயங்களைக் கூட தனது உதவியாளர் மூலம் துரைமுருகனுக்கு பாஸ் பண்ணுவார். ஆனால் ஜெ. அன்பழகன் மறைவுக்குப் பின் முற்றிலும் மாறியிருக்கும் ஸ்டாலின், துரைமுருகனிடம் நேரடியாகவே தினந்தோறும் அல்லது இரு நாளைக்கு ஒருமுறை என அலைபேசியில் அடிக்கடி பேசி நலம் விசாரிக்கிறார் என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *