தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் போது, விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றது கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், தருமபுரி மல்லாபுரம் ஆகிய பகுதிகளில் திமுகவினரைக் கண்டித்து விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச்சூழலில், முதல்வரின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தை’ காத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினர்.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். இதுபோன்ற செயல்களால் குற்ற உணர்ச்சியில் நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அதோடு திமுக தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளரும் அமைச்சருமான நேருவிடம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான கடிதங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் சொல்லி வாங்குங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளிடம் பதவி பங்கீடு தொடர்பாகப் பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற அமைச்சர்கள் கே. என். நேரு, எ.வ.வேலு, எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் அனைத்து மாவட்டச் செயலாளர்களிடம் , ராஜினாமா கடிதத்தை வாங்குங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இன்று இரவுக்குள் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்காதவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என கடுமையான முடிவை மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறாராம். ஏனென்றால், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கூட்டணி இடங்களில் போட்டியிட்ட திமுகவினரின் செயல்களால் குற்ற உணர்ச்சியில் நான் குறுகி நிற்கிறேன், கட்சித் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தது அறிவுஜீவிகளிடம் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறதாம். இதைதொடர்ந்து வெறும் அறிவிப்போடு விட்டுவிடாமல் அதை செயல்படுத்தும் முனைப்பிலும் இருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
**-பிரியா**