Bஸ்டாலினின் டேஞ்சர் கேம்!

Published On:

| By Balaji

‘‘நான் யார் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை… என் மீதும் கூட!’’ – ரஷ்யாவை வல்லரசாக மாற்றிக் காட்டிய ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழி இது. லெனின் மறைவுக்குப் பின், அவருடைய இடத்துக்கு வருவதற்கான போட்டி கடுமையாக இருந்தது. எல்லோரும் வளர்ச்சியை முன்னெடுத்து பரப்புரையில் இறங்கினார்கள். ‘ஒரே தேசத்தில் சமவுடைமை’ என்ற கோஷத்தை முன்னிறுத்தி ஸ்டாலின் களமிறங்கினார். வென்றார். ஆனால் அவருடைய இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில்தான் சோவியத் யூனியன், ஐந்து மடங்கு பொருளாதாரத்தில் வளர்ந்தது. வல்லரசாக உருவெடுத்தது. ஸ்டாலினுக்கென்று இன்னொரு முகமும் உண்டு. அவர் அதிகாரத்தில் இருந்த இருபதாம் நுாற்றாண்டில்தான் இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டார்கள். சர்வாதிகாரியாக அவர் உறுதியாக இருந்து எடுத்த நடவடிக்கைகள்தான் அந்த தேசத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

ஸ்டாலின் என்று தன் மகனுக்குக் கலைஞர் பெயர் சூட்டுவதற்கான காரணங்களை, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல மேடைகளில் அவர் விளக்கியிருக்கிறார். நெஞ்சுக்கு நீதியில் துவங்கி எத்தனையோ நூல்களில் எழுதியும் இருக்கிறார். ரஷ்யத் தலைவர் ஸ்டாலினுக்கு இருந்த உறுதியும் திடமும் இருக்க வேண்டுமென்று கலைஞர் நினைத்திருக்கலாம். அது அவரிடம் இருக்கிறதா, ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தால் அவருடைய அணுகுமுறைகள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பலவிதமான யூகங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் கட்சியின் தலைமையாக இருந்தாலும், ஆட்சியில் தலைமையாக இருந்தாலும் அதே உறுதியில்தான் இருப்பேன் என்பதை, கூட்டணிக்கட்சிகளைக் கையாண்ட விதத்தில் காட்டிவிட்டார் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்ற வகையில், அவருடைய நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகளால் ஏற்படும் வெற்றி, தோல்விகளின் விளைவுகளையும் அவரேதான் எதிர்கொள்ளப் போகிறார். அதனால் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தையும் அவர் இப்போது எடுக்கும் முடிவுகள்தான் தீர்மானிக்கப் போகின்றன. அது திமுகவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்குமா என்பதற்கு காலத்திடம்தான் பதில் இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை அவர் நடத்திய விதமும், தொகுதிகளை ஒதுக்கிய விதமும் ஸ்டாலின் எந்தப் பொறுப்புக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றன.

ஸ்டாலின் எப்போதுமே இப்படித்தானா அல்லது இப்போதுதான் இவ்வளவு உறுதியாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள திமுக தலைமைக்கழகத்தின் அனைத்து அசைவுகளையும் அறிந்த கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்…

‘‘இதுவரையிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட் தர வேண்டும், எந்தெந்த தொகுதிகளை நாம் எடுத்துக்கொள்வது என்பதையெல்லாம் கலைஞர்தான் முடிவு செய்வார்; தலைவர் ஸ்டாலினும் தன் கருத்தைத் தெரிவிப்பார். ஆனால், ஒரு எல்லைக்கு மேல் தலையிட மாட்டார். ஆனால், இந்த முறை அவரேதான் எல்லாவற்றையும் இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். சொல்லப்போனால் இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களை விட, இந்தத் தேர்தலில்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் அவர்கள் ஒரு எதிர்பார்ப்பில் இருந்தார்கள். ஆனால் ‘ஐபேக்’ கொடுத்த எண்ணிக்கையின் அடிப்படையில் சீட் தர முடியுமென்பதில் தலைமை உறுதியாக இருந்தது.

ஏனெனில் மூன்று மாதங்களுக்கு முன்பே, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஒரு முக்கியமான கூட்டம் நடந்தது. பிரசாந்த் கிஷோரும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் தலைவருடன் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லோருமே இருந்தார்கள். சபரீசனும் இருந்தார்.

அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்கலாம் என்று பேச்சு எழுந்தபோது, ‘எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில் தொகுதிக்கு மூன்று என்ற கணக்கில் சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கலாம்’ என்று ராசா சொன்னார். அது கடுமையான விவாதத்தைக் கிளப்பியது. அதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று பலரும் கேட்டார்கள்.

அதற்குப் பிறகுதான், ‘ஐபேக்’ நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 18 சீட்டுகள் என்றும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று, மதிமுகவுக்கும், சிபிஐக்கும், முஸ்லிம் லீக்கிற்கு தலா 2, சிபிஎம்முக்கு 3, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒன்று என்றும் தலைவர் முடிவெடுத்திருந்தார்.

தேர்தல் அறிவிப்பு வந்ததும், தொகுதிப் பங்கீட்டை எப்போது பேசலாம் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘முதல்கட்டமாக வேலுவிடம் பேசுங்கள். ஒரு முடிவுக்கு வந்தபின்பு அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையைத் துவக்கலாம்’ என்று தலைவர் கூறிவிட்டார். வேலுவின் வீட்டுக்குப் போய் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் துவக்குவதையே பலரும் சங்கடமாக நினைத்தார்கள். வேறுவழியின்றிப் போய்ப் பேசினார்கள். அவர்களிடம் ‘இதுதான் தலைவரின் முடிவு’ என்று விளக்கிவிட்டார் வேலு. எல்லோருமே ‘அப்செட்’ ஆகிவிட்டார்கள். பேச்சுவார்த்தை தொடங்கிய பின், இணக்கமான சூழலே இல்லாமல் போனது.

காங்கிரஸ் தலைவர் அழகிரி, சத்தியமூர்த்தி பவனில் தேம்பித்தேம்பி அழுதே விட்டார். அவர்கள் 35 சீட்டுகள் வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார்கள். நாங்கள் 18 சீட்டில்தான் ஆரம்பித்தோம். கடைசியில் 24 சீட்டுதான் என்று உறுதியாகக் கூறப்பட்டது. தினேஷ் குண்டுராவ், குறைந்தபட்சம் 28 சீட்டாவது வேண்டுமென்றார். அதற்கு கனிமொழி, ‘ஏற்கெனவே பேசியபடி ராஜ்யசபா சீட் ஒன்று தருவதற்குத் தயாராக இருக்கிறோம். அது வேண்டாமென்றால் 28 சீட் தருகிறோம்’ என்று சொல்ல ‘வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லி, கடைசியில் 25 என்று முடிவாகிவிட்டது.

கூட்டணிக்கட்சித் தலைவர்கள் எல்லோரும் இறுக்கமாக இருந்தபோதுதான், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளை தங்களுடைய தலைமையில் இணைத்து, கூட்டணிக்குள் ஒரு உள்கூட்டணியை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் முயற்சி செய்தனர். நாலு கட்சியும் சேர்ந்து போய்க் கேட்டால்தான் கேட்டது கிடைக்குமென்று பேசிப்பார்த்தார்கள். ஆனால் மக்கள் நலக் கூட்டணிக்கு நேர்ந்த கதி நினைவுக்கு வந்ததால், வேண்டாமென்று கூறி, திருமாவளவன் முதலில் போய் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார். வைகோவும் திடீரென மனம் மாறி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டார். மதிமுகவுக்கு நான்கு சீட்டுகள்தான் என்று சொன்னதும் வைகோவும் அழுத்தமான மனநிலையில்தான் இருந்தார். அவர் எட்டு சீட்டாவது வேண்டுமென்று மிகவும் கடுமை காட்டினார். அப்போதுதான் தலைவர் அவரிடம் ‘ராஜ்யசபா சீட் கொடுத்தபோது, சட்டமன்றத் தேர்தலில் சீட்டே தராவிட்டாலும் உங்களோடு இருந்து ஆட்சிப்பீடத்தில் உங்களை அமர்த்துவேன் என்று சொன்னீர்கள். இப்போது ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள். உதயசூரியன் சின்னத்தில் நிற்பதாக இருந்தால் ஆறு சீட் தருகிறோம்’ என்றார். அடுத்த நிமிடமே வைகோ அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். இந்த மாற்றங்கள், மார்க்சிஸ்ட்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர்கள் முதலில் கேட்க நினைத்தது 12 சீட்டுகள். ஆனால் ஆறு சீட்டுகள்தான் என்று திமுக தலைமை கூறியதும் பெரிதும் அப்செட் ஆகிவிட்டார்கள். அந்தக் கட்சியின் எம்.பிக்கள், ‘நாம் தனித்து நிற்போம்; நம்முடைய வாக்கு வங்கி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வோம்’ என்று சொன்னார்கள். பாலகிருஷ்ணனும், ‘இது நமக்கு பெரும் அவமரியாதை. இவ்வளவு குறைவாக நாம் சீட்டுகளை வாங்கிப் போட்டியிட வேண்டுமா’ என்று குமுறிக்கொண்டிருந்தார். ஆனால் எப்படியோ அவர்களையும் பேசிச் சமாளித்து ஆறு சீட்டுகள் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து விட்டார் எங்கள் தலைவர். இதுதான் ஆளும்கட்சியையே பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், எங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களும் ‘இவ்வளவு குறைவாக சீட் தருகிறோமே. அவர்கள் போய்விட்டால் என்ன செய்வது… அதன் பிறகு வெற்றிக்கு இன்னும் அதிகமாக போராட வேண்டியிருக்குமே’ என்று பதற்றத்தில்தான் இருந்தார்கள். ஆனால் முதலில் இருந்தே தலைவரிடம் பதற்றமே இல்லை. அவர் மட்டும் தெளிவாக இருந்தார். ‘போன தேர்தலிலேயே இவர்கள் எல்லோரும் வெளியே போய் மக்கள் நலக் கூட்டணியைத் துவக்கியதால்தான் நாம் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழக்கவும், அதிமுக மீண்டும் ஜெயிக்கவும் காரணமாக இருந்தார்கள். அதனால் இந்த முறை நாம் நிற்க நினைக்கும் இடங்களைக் குறைக்காமல் நிற்போம். அவர்கள் வெளியே போனாலும் பரவாயில்லை’ என்ற மனநிலையில் அவர் உறுதியாக இருந்தார். அந்த உறுதி எங்களையே அதிரவைத்துவிட்டது. வேட்பாளர் தேர்விலும் அவர் இப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறோம்!’’ என்றார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர், இன்னொரு கோணத்தில் இதை அலசினார்…

‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும், தொகுதி ஒதுக்கீட்டிலும் ஸ்டாலின் கொஞ்சமும் வளைந்து கொடுக்கவில்லை என்கிறார்கள். அப்படி நான் நினைக்கவில்லை. ஏற்கெனவே மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபடி, ஒரு எம்.பி தொகுதிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வீதமாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸுக்கு 8 எம்.பிக்கள்தான் இருந்தாலும் ராகுல் தலையிட்டதன் காரணமாக 24க்குப் பதிலாக கூடுதலாக ஒரு சீட் தரப்பட்டிருக்கிறது. அதனால் ஸ்டாலின் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார் என்பது நிச்சயம். அதற்காக அவர் வளைந்து கொடுக்கவே இல்லை என்பது அர்த்தமாகிவிடாது. கட்சியை நடத்தவும் ஆட்சியைக் கைப்பற்றவும் இந்த உறுதி நிச்சயமாக உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்!’’ என்றார்.

பட்டு கையுறைகளைக் கொண்டு உங்களால் புரட்சியை உருவாக்க முடியாது என்று சொல்வார் ரஷ்யத் தலைவர் ஸ்டாலின். சில தருணங்களில் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டுமென்பதே அதன் அர்த்தம். அவரும் அப்படித்தான் முடிவெடுத்தார். அதில் அசாத்தியமான வெற்றியையும் பெற்றார். பெயரால் மட்டுமின்றி, இந்த உறுதியிலும், வளர்ச்சியின் பாதையில் ஆட்சியை நடத்துவதிலும் ஜோசப் ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பிரதிபலித்தால் அது திமுகவுக்கு மட்டுமில்லை; தேசத்துக்கே நல்லதுதான்.

இதுவும் கூட ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிதான்…

‘‘வெல்லமுடியாத படை என்று உலகில் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை வரலாறு காட்டுகிறது!’’

**–பாலசிங்கம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share