kஊரடங்கு மட்டும் கடமை கிடையாது: ஸ்டாலின்

Published On:

| By Balaji

ஊரடங்கை நீட்டிப்பது மட்டும் அரசின் கடமை அல்ல என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்குக் காலம் முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ளன. எனினும், நான்காம் கட்ட ஊரடங்கு காலத்தை விட, ஐந்தாம் கட்ட ஊரடங்கு காலத்தில், கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. மே 8ஆம் தேதியன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,009 பேர் என்ற நிலை இருந்தது. ஜூன் 8ஆம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 27 ஆயிரம் பேருக்கும் கூடுதலாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று (ஜூன் 12) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “உலகத்திலேயே ஊரடங்கை இத்தனை ஓட்டை உடைசல்களோடு அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். முழு ஊரடங்கு – ஊரடங்கு – தளர்வு ஊடரங்கு – தளர்வில் மேலும் தளர்வு என்று ஊரடங்குச் சட்டத்தையே தரம் தாழ்த்தி, தொடர்ந்து கொச்சைப்படுத்தியது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு என்ன நிவாரணம் செய்தது என்று எங்கும் கேள்வி கேட்டு நிர்ப்பந்திப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காகப் பயந்து, ஊரடங்கைத் தளர்த்திவிட்டது அரசு” என்று விமர்சித்துள்ளார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கி இருந்தால் ஊரடங்குத் தளர்வுகள் அளித்திருக்க வேண்டாமல்லவா என்று குறிப்பிட்டவர், “அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்குத் தளர்வுகள்தான், இன்றைக்கு கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடம் என்ற நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது” எனவும் விமர்சித்தார்.

தொடர்ந்து, “இந்தியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102 பேர் என்றால், தமிழகத்தில் பலியானவர் எண்ணிக்கை 349 பேர். இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதில் சென்னை என்ற ஒரு நகரத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 279 பேர். இது பெரிய எண்ணிக்கை இல்லையா? இறப்பு விகிதத்தைச் சொல்லி, தனது நடவடிக்கையை நியாயப் படுத்த முயற்சி செய்யும் முதல்வருக்கு, மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,

கொரோனா மரணங்கள் குறித்து சுகாதாரத் துறை சொல்லும் கணக்கும், சென்னை மாநகராட்சி சொல்லும் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது; இரண்டுமே அரசின் துறைகள் தானே எனக் கேட்டுள்ளார்.

மேலும், “நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. 30 ஆயிரத்தைக் கடந்திருக்கும் தொற்று, 2 இலட்சம் ஆகலாம் என்று அரசே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தருகிறது என்றால், அதனைத் தடுக்க இந்த அரசாங்கம் மருத்துவ ரீதியாக என்ன செய்யப் போகிறது?

மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாகச் செய்தி பரவி வருகிறது. அதனை முதலமைச்சர் மறுத்துள்ளார். அதேவேளையில், ”பல இடங்களில் இந்த வைரஸ் தொற்று கொத்துக் கொத்தாக மக்களிடம் பரவுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை செய்துள்ளது. இதன் பிறகாவது செயல்படுங்கள். ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பது மட்டுமே அரசாங்கத்தின் கடமை அல்ல; அடுத்தடுத்துத் தேவையான மருத்துவக் கட்டமைப்பைத் திட்டமிட்டு, கொரோனாவைத் தடுப்பதே அரசாங்கத்தின் கடமை என்பதை உணருங்கள்.

டெண்டர்களை இறுதி செய்வதிலும், தமக்கு அவசியம் எனக் கருதும் கோப்புகளை நகர்த்துவதிலும், மத்திய பா.ஜ.க. அரசை மகிழ்விப்பதிலும் செலவிடும் நேரத்தின் ஒரு சிறு பகுதியையாவது, கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்குச் செலவிடக் கருணையுடன் முன்வாருங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share