லங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தினமும் ஒரு வேளை உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, தான் பதவியேற்ற முதல் நாளில் இருந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையாகப் போராடி வருகிறார். மேலும், இந்தப் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய புதிதாக அமைந்த அமைச்சரவை பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையாக இருக்கும் நிலையில், “இது வெறும் முதல் கட்டம்தான். இலங்கை சந்திக்க வேண்டிய நெருக்கடி இன்னும் நிறைய உள்ளது” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வாரம் பொதுமக்களிடம் உரையாற்றியபோது கூறியிருந்தார். மேலும், இந்தியாவிடமிருந்து ஏற்கனவே வாங்கியிருந்த நிதியுதவி போதுமானதாக இல்லை என்பதால் உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க உரத்துக்காக மேலும் நிதி உதவி கோரப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மேலும் நிதி உதவி தேவை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “இலங்கையின் தற்போது இடைக்கால பட்ஜெட் தயாராகி வருகிறது. கடும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால், அத்தியாவசிய தேவைகளான எரிபொருள், உணவு, மருந்துகள் இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலையில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களில் 5 பில்லியன் டாலர்கள் நிதி உதவி தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “இலங்கை பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மட்டும் போதாது. பழைய நிலைமைக்குக் கொண்டுவந்து வலிமையாக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
.