ஐயா, உங்கள் மாளிகையை சூழ எட்டடுக்கு பாதுகாப்பு. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காக்க படைகள் உஷார் நிலையில். புலனாய்வாளர்களும் களத்தில்.
உங்கள் மாளிகையில் அறுசுவையில் உண்பதற்கு தேவையான உணவுப் பொருட்களும் குவிந்து கிடக்கும். சமைப்பதற்கு, சுவை பார்ப்பதற்கு, பரிமாறுவதற்கு, பாத்திரம் கழுவுவதற்கென பலர் பணியில்.
பிரத்தியேக வைத்தியர்கள், ஆலோசகர்கள், நாட்டில் பல பகுதிகளில் மாளிகைகள் என சர்வமும் உங்கள் வசம். உங்களுக்காக – உங்கள் குடும்பத்துக்காக நிமிடத்துக்கு செலவழிக்கப்படும் பணத்தில் பகுதியளவுதான் பலபேரின் மாத சம்பளம்.
ஆக – விலைகுறைந்த அரிசியை தேடி அங்கும், இங்கும் அலைந்து அதிலும் அரை கிலோ வாங்கிவந்து, சமைத்து உண்பவர்களுக்குதான் வாழ்வின் ‘வலி’ புரியும்.
மரக்கறிகளையும், இறைச்சி வகைகளையும் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. காடு , மலையெல்லாம் திரிந்து – தக்காளி கீரை, சேமன்கீரை, மரவள்ளிகீரை என இலவசமாகவும், சொற்ப விலைக்கும் கிடைப்பவற்றை கொண்டுவந்தாதான் ‘கறி’ என்ற போர்வையில் எதையோ சமைத்து உண்கின்றோம். விருப்பம் இல்லாவிட்டால்கூட வயிற்று பசியை போக்க, வேறு வழியில்லை. குழந்தைகளுக்கு புரதம் உள்ளிட்ட சத்துணவுகளை கொடுக்க முடியாத ‘வலி’ எங்களுக்குதான் புரியும்.
கேஸ் விலையும் எகிறிவிட்டது. ‘ரைஸ்’ குக்கரில் சோறு சமைத்துவிட்டு, அதனை கழுவி – கறி சமைப்பதற்குள் கரன்ட் கட் ஆகிவிடுகிறது. வீட்டுக்குள்ளேயே சிரட்டையை பயன்படுத்தி சமைக்கும் அவலம். புகை கிளம்புவதாக வீட்டை வாடகைக்கு வழங்கியவரிடம் ஆயிரம் திட்டு. ஆக எங்களுக்குதான் ‘வலி’ புரியும்.
பிரசர், சுகர் டெப்லட்டுகளை வாங்க, அம்மா, அப்பா வரிசையில் காத்து கிடக்கும்போது – பார்மசியில் வாங்க வைத்திருந்த பணத்தில் பிள்ளைகளுக்கு எதையாவது வாங்கி வரும்போது – என்னடா வாழ்க்கை இது என்ற ‘வலி’ நிச்சயம் எங்களுக்குதான் புரியும்.
கோல்டன் கவ், சரலக் எல்லாம் வாங்க முடியாமல், வெறும் மாரி பிஸ்கட்டை தண்ணீரில் நனைத்து, குழந்தைகளுக்கு ஊட்டி கோர பசியை சமாளிக்கும் மனைவியின் முகத்தை பார்க்கும்போது – வேதனையால் எங்கள் மனம் கதறி அழும் வலி எங்களுக்குதான் புரியும்.
உங்கள் பாதுகாப்புக்கு திடீரென ஊரடங்கு. அதற்குள் தாலியில் உள்ள ஒரு குண்டுமணியை கழற்றி அடகு வைத்து – அரிசி வாங்குவதற்கு ஆயிரம் போராட்டம். நேரத்துக்கு வெளியேறாவிட்டால் நாட்டு சட்டம், ஒழுங்கு தனக்கே உரிய பாணியில் சீறிப்பாய்கின்றது. இரத்தம் கொதித்து – உணர்வு பொங்கியெழுந்தாலும் குடும்ப நலன் கருதி – பொட்டை கோழியாக தலைகுனிந்து திரும்பும் வலி எங்களுக்குதான் தெரியும்.
இவற்றை தாங்க முடியாமல்தான் பலர் வீதிக்கு இறங்கிவிட்டனர். நீங்கள் எங்கள் வீடுகளில் விளக்கேற்றாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து இனியும் விலையேற்றிவிடவேண்டாம்.
மூன்று டோஸ் தடுப்பூசி ஏற்றி என்ன பயன்? பட்டினியில் சாவதைவிடவும் ஓர் பயங்கரம் உலகில் இருந்துவிடமுடியாது.
உங்களுக்கு இந்நாள் சாதாரண ஒரு நாள்தான். இதுவும் கடந்துபோகும். ஆனால் எங்களுக்கு, இந்நாளுக்காக நாளையும் உழைக்க வேண்டும் – போராட வேண்டும்.
அதானால்தான் சொல்கின்றோம். போதும், வழி விடுங்கள் – எங்களை வாழ விடுங்கள்.
பரிதவிக்கும் எங்களுக்கு உங்கள் ‘அவசரகால சட்டம்’தான் நிவாரணம் எனில் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வலிகளால் வலி சுமக்கும் உங்களில் ஒருவன்
**ஆர்.சனத்**
(இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் பற்றியே உலக ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியின் விளைவாக இலங்கையின் எளிய மக்கள் எதிர்கொண்டு வரும் அவஸ்தைகளை பத்திரிக்கையாளர் ராமச்சந்திரன் சனத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்)