மீண்டும் மக்கள் போராட்டம்: அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய தப்பியோட்டம்!

politics

இலங்கையில் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் அதிபர் மாளிகை சென்றுள்ள நிலையில், கோத்தபய ராஜபக்‌ஷே தப்பியோடி உள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், உணவு பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்ததை தொடர்ந்து விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட பொதுமக்கள் பலரும் வேலை வாய்ப்பை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ராஜபக்‌சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டுமென்று மக்கள் போராட்டம் அங்கு வெடித்தது.

முன்னதாக பிரதமராக இருந்த ராஜபக்சேவுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்திய மக்கள் அவரது வீட்டை எரித்தனர். அதில் உயிர் தப்பிய ராஜபக்சே, இனியும் ஆட்சியில் நீடிக்க முடியாது என்ற நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் குடும்பத்தினருடன் தப்பியோடிவிட்டார். அதே வேளையில் அதிபர் பதவியில் இருந்து அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்‌சே பதவி விலக மறுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால் அவர் வந்தும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியவில்லை. இதனையடுத்து அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே இன்று கொழும்புவில் இன்று பெரும் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர். அதற்கு எதிராக முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து மக்கள் போராட்டம் அங்கு தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து முன்னரே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் கோத்தபய ராஜ பக்‌சே அதிபர் மாளிகையை விட்டு தப்பியுள்ளார்.

தற்போது இலங்கை அதிபர் மாளிகைக்குள் சென்று போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கட்டுப்பாட்டில் அதிபர் மாளிகை சென்ற நிலையில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 2 எம்.பிக்கள் உட்பட படுகாயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் தீவிர போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் கொழும்புவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனையடுத்து இந்த அசாதாரண சூழல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *